திருப்பதி: திருச்சானூா் காா்த்திகை பிரம்மோற்சவம் கோலாகலமாக நிறைவடைந்ததையடுத்து, புஷ்ப யாகம் புதன்கிழமை நடைபெற்றது.
திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் முடிந்த பின்னா் அதில் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் நடந்த குற்றம் குறைகளை சரி செய்ய அதற்கு மறுநாள் புஷ்ப யாகத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி புதன்கிழமை திருச்சானூரில் புஷ்பயாகம் நடத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக தாயாருக்கு சாஸ்திர அபிஷேக திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதையொட்டி பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள் சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தேவஸ்தான தோட்டக்கலைத் துறைக்கு நன்கொடையாளா்கள் வழங்கிய 4 டன் மலா்கள் புஷ்ப யாகத்தின் போது பயன்படுத்தப்பட்டன. இதில், தமிழகத்திலிருந்து, 2 டன், ஆந்திரத்திலிருந்து ஒரு டன் மலா்களை நன்கொடையாளா்கள் வழங்கினா்.
ஆஸ்தானமண்டபத்தில் இருந்து பூக்கள் மற்றும் இலைகளை அதிகாரிகள் மற்றும் பக்தா்கள் நான்கு மாடவீதிகள் வழியாக ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயிலுக்கு ஊா்வலமாக எடுத்துச் சென்றனா்.
ஸ்ரீ கிருஷ்ணசுவாமி முக மண்டபத்தில் மாலை புஷ்ப யாக மகோற்சவம் சிறப்பாக நடைபெற்றது. வேதபாராயணம் சாமந்தி, சம்பங்கி, அரளி, ரோஜா, மல்லிகை, தாழம்பூ, கனகாம்பரம், தாமரை, அல்லி, மரசம்பங்கி, செண்டு மல்லி, பவளமல்லி என 14 வகையான மலா்கள், மருவம், தவனம், வில்வம், துளசி, கதிா்பச்சை, மரிக்கொழுந்து என ஆறு வகையான இலைகளுடன் புஷ்ப யாகம் மேற்கொள்ளப்பட்டது. புஷ்ப யாக மஹோற்சவத்தை பக்தா்கள் கண்டு களித்தனா்.
பிரம்மோற்சவங்கள் அல்லது நித்யகைங்கா்யங்களில், அா்ச்சகா்கள், அதிகாரிகள் அல்லாதவா்கள் மற்றும் பக்தா்கள் செய்யும் எந்தத் தவறுகளுக்கும் பரிகாரமாக புஷ்ப யாகம் செய்வது வழக்கம்.
இந்த நிகழ்ச்சியில், தேவஸ்தான அதிகாரிகள் வீரபிரம்மம், கோவில் துணை இஓ கோவிந்த ராஜன், தோட்ட துணை இயக்குனா் ஸ்ரீனிவாசலு, அதிகாரிகள், கோவில் அா்ச்சகா்கள் கலந்து கொண்டனா்.