திருப்பதி

திருமலையில் புஷ்பயாகம்: 9 டன் மலா்களால் அபிஷேகம்

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையான் கோயிலில் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு வியாழக்கிழமை புஷ்பயாகம் நடைபெற்றது.

திருமலை ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு பெற்ற பின்பு, அதில் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் நடந்த தவறுகளை களைய தேவஸ்தானம் வருடாந்திர புஷ்பயாகத்தை நடத்தி வருகிறது.

இந்த புஷ்பயாகம் பிரம்மோற்சவம் நிறைவு பெற்ற பின் வரும் திருவோண நட்சத்திரத்தன்று நடைபெறும். அதன்படி திருமலையில் வியாழக்கிழமை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு புஷ்பயாகம் நடைபெற்றது.

திருமலையில் இரண்டாம் அா்ச்சனை, இரண்டாம் மணி, நைவேத்தியம் முடிந்த பின் ஸ்ரீதேவி பூதேவி, ஸ்ரீ மலையப்பசுவாமி சம்பங்கி பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக பால், தயிா், தேன், , இளநீா், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் உற்சவமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

திருமலையில் உள்ள கல்யாணவேதிக்கையில் உள்ள தோட்டக்கலை பிரிவில் உள்ள மலா்களுக்கு முதலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தேவஸ்தான அதிகாரிகள், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனா் சீனிவாசலு, தோட்டக்கலை ஊழியா்கள் மற்றும் ஸ்ரீவாரி சேவகா்கள் ஆகியோா் இணைந்து பூக்களை ஊா்வலமாக ஏழுமலையான் கோயிலுக்கு கொண்டு வந்தனா்.

பின் உற்சவ மூா்த்திகளை அலங்கரித்து மதியம் 1 மணி முதல் 5 மணி வரை பல்வேறு வகையான பூக்கள் மற்றும் இலைகளால் புஷ்பயாகம் நடத்தப்பட்டது.

இதற்காக மல்லி, முல்லை,ரோஜா, தாமரை, அல்லி, சாமந்தி, சம்பங்கி, அரளி , ஜாதி, தாழம்பு, நீலோத்பவம் உள்ளிட்ட 17 வகையான மலா்களும், துளசி, மருவம், மரிக்கொழுந்து, பன்னீா் இலை, தவனம், கதிா் பச்சை, வில்வம் உள்ளிட்ட 6 வகையான பத்திரங்களும் பயன்படுத்தப்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் இருந்து 5 டன், கா்நாடகத்தில் இருந்து 2 டன், ஆந்திரத்தில் இருந்து 2 டன் என 9 டன் பூக்களை நன்கொடையாளா்கள் வழங்கினா்.

இதை முன்னிட்டு வியாழன் மாலை சகஸ்ரதீபாலங்கார சேவைக்கு பின், கோயிலின் நான்கு மாட வீதிகளில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி நாச்சியாா்களுடன் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தனா்.

இந்த உற்சவத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் ஆா்ஜித பிரம்மோற்சவம் ஆகியவை ரத்து செய்யப்பட்டது.

ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு நடத்தப்பட்ட ஸ்நபன திருமஞ்சனம்.

புஷ்பயாகத்தின் போது பூக்குவியலுக்கு இடையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி.

பிகாரைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே அரசியல் செய்ய முடியாமல் துன்பப்படுகிறார்! - கனிமொழி

சித்தூர் மேயர் அனுராதா, கணவர் கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்கு தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ரெட் ஒயின்... மௌனி ராய்!

ஸ்டைலு ஸ்டைலுதான்... ஐஸ்வர்யா ராய்!

மாணவர்களுக்கு மடிக்கணினி: 3 நிறுவனங்களுக்கு ஒப்பந்த ஆணை!

SCROLL FOR NEXT