61 நில அளவைத் துறை வரைவாளர்களுக்கு 3 மாதப் பயிற்சி: மாவட்ட ஆட்சியர் தொடக்கிவைத்தார்
திருவண்ணாமலை உள்பட 8 மாவட்டங்களில் நில அளவைத் துறையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 61 வரைவாளர்களுக்கான 3 மாதப் பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
திருவண்ணாமலை உள்பட 8 மாவட்டங்களில் நில அளவைத் துறையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 61 வரைவாளர்களுக்கான 3 மாதப் பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் நில அளவைத் துறை கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. இந்தத் துறையில் உள்ள வரைவாளர் பணி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. களப் பணியாளர்கள் களத்தில் செய்யும் பணிகளை அந்தந்த அளவுகளுக்கு ஏற்றாற்போல வரைந்து, புலத்தை பிரதிபலிக்கும் வகையில் தயாரிப்பது வரைவாளர் பணி.இந்த புலங்கள் வரைவாளர்களால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு புலங்களுக்குமான பரப்பு துல்லியமாக கணித்து சரிபார்க்கப்படுகிறது. நில அளவை பராமரிப்புப் பிரிவு ஆவணங்கள் அனைத்தும் வரைவாளர்களாலேயே பராமரிக்கப்படுகிறது. புதிய உள்பிரிவு மாறுதல்கள், உடனுக்குடன் இன்றைய நிலையை பிரதிபலிக்கும் வரையில் வட்ட ஆவணங்கள் மற்றும் கணிணியில் உடனுக்குடன் பதிவு மாற்றங்கள் வரைவாளர்களால் மேற்கொள்ளப்படுகிறது. புலப்படம், கல் வரைபடங்கள், கிராம வரைபடங்கள், வட்ட வரைபடங்கள் மற்றும் மாவட்ட வரைபடங்கள் அனைத்தும் அந்தந்த அளவுகளுக்கு ஏற்ப வரைவாளர்களால் வரைவு செய்யப்படுகிறது.
61 வரைவாளர்கள் நியமனம்: இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த வரைவாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் அறிவிக்கை வெளியிட்டது. இந்த அறிவிக்கை மூலம் சென்னை மண்டலத்துக்கு 61 வரைவாளர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
3 மாதப் பயிற்சி தொடக்கம்: இவர்களுக்கான 3 மாதப் பயிற்சி வகுப்பு திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை தொடங்கியது. பயிற்சி முகாம் தொடக்க விழாவுக்கு நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் ஜி.ரூப்சிங் தலைமை வகித்தார்.
கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, நில அளவைத் துறையின் திருவண்ணாமலை கோட்ட ஆய்வாளர் எ.ராஜா, வட்டாட்சியர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பயிற்சி முகாமை தொடக்கி வைத்துப் பேசினார்.
இந்தப் பயிற்சி முகாமில் சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள 61 வரைவாளர்கள் கலந்து கொண்டு தொடர்ந்து 3 மாதங்களுக்குப் பயிற்சி பெறுகின்றனர்.