திருவண்ணாமலை

மணிலாவுக்கு காப்பீடு கோரி விவசாயிகள் நூதன போராட்டம்

DIN

மணிலா பயிர் செய்துள்ள விவசாயிகளுக்கு காப்பீடு வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரகம் எதிரே விவசாயிகள் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டக் கிளையின் அமைப்பாளர் வி.ஜி.புருஷோத்தமன் தலைமையில் விவசாயிகள் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில் திரண்டனர். பின்னர், திடீரென அவர்கள் விநாயகர் படங்களுடன் ஊர்வலமாக ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் வரை வந்து, படத்துக்குப் பூஜை செய்தும், கீழே விழுந்து விநாயகரை வணங்கியும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரப் போராட்டத்துக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியைச் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் மானாவாரி மணிலா விதைக்கப்பட்டது. ஆடி மாதத்தில் மழை பெய்யாததால் பூ எடுக்காமல் மணிலா செடிகள் கருகின. எஞ்சிய செடிகள் 90 நாள்களுக்குப் பிறகு மழை பெய்ததால் தற்போது இளந்தளிராக உள்ளது. இதனால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மகசூல் இழப்பைக் கணக்கிடக் கோரி கடந்த ஜூலை 30-ஆம் தேதி நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தோம். அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
100 நாள்கள் வேலை உறுதியளிப்புத் திட்டம் மூலம் கடந்த ஆண்டுகளில் 6 நாள்கள் மட்டும் வேலை அளித்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு தேசிய விருது வழங்கியது எந்த வகையில் பொருந்தும் என்பது வியப்பாக உள்ளது.
பாதிக்கப்பட்ட மணிலா விவசாயிகளுக்கு காப்பீடு கிடைக்குமா?, 100 நாள்கள் வேலை தொடர்ச்சியாக வழங்கப்படுமா என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு செப். 21-ஆம் தேதிக்குள் பதில் வழங்க வேண்டும். 
இல்லாவிட்டால் செப். 22-ம் தேதி காலை செய்யாறு அணைக்கட்டு பாலத்தின் மீது இருந்து விநாயகர் குதிக்க உள்ளார். இந்தப் போராட்டத்துக்கு வேளாண் துறை அனுமதி வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 
மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT