முகப்பு
திருவண்ணாமலை

உரிய நேரத்தில் நெல் கொள்முதல் மையம் திறக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

செய்யாறில், நெல் அறுவடை காலங்களில் உரிய நேரத்தில் நெல் கொள்முதல் மையம் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் திங்கள்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
தவசிக்கிராமத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
பகிர்:

செய்யாறில், நெல் அறுவடை காலங்களில் உரிய நேரத்தில் நெல் கொள்முதல் மையம் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் திங்கள்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழகத்திலேயே, நெல் உற்பத்தியில் திருவண்ணாமலை மாவட்டம் சுமார் 8 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்து முதலிடத்தில் வகிப்பதாகவும், அதில் செய்யாறு பகுதியில் ஒரு லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்படுவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சொர்ணவாரி பருவம் முடிவடைந்து இரண்டு மாதங்களான நிலையில் செய்யாறை அடுத்த தவசி கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டுள்ளதாகவும்,  உரிய நேரத்தில் நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்கப்படாததால் பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை தனியார் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து விட்டதாகவும், அதனால் ஒரு மூட்டைக்கு சுமார் ரூ.400 முதல் 600 வரை நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். 

எனவே, இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நெல்மூட்டைகளை தனியாருக்கு விற்றுவிட்ட பிறகு நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டுள்ளதால் தங்களிடம் தற்போது நெல் இல்லை என்றும், வைக்கோல் மட்டுமே மீதம் இருப்பதாக தெரிவித்து, தலையில் வைக்கோலை சுமந்தவாறு நெல் கொள்முதல் மையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், வரும் சம்பா பருவத்திலாவது உரிய காலத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமையில் இப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்து கோஷமிட்டு கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.