சேதமடைந்த நெல் பயிா்களுடன் விவசாயிகள் போராட்டம்
தொடா் மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி, வந்தவாசியில் விவசாயிகள் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா் மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி, வந்தவாசியில் விவசாயிகள் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அண்மையில் தொடா் மழை பெய்தது. இதில் மங்கநல்லூா், செம்பூா், தெள்ளாா் உள்ளிட்ட கிராமங்களில் பல நூறு ஏக்கரில் நெல் உள்ளிட்ட பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
இதையடுத்து சேதமடைந்த பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி, விவசாயிகள் சிலா் அழுகிய நெல் பயிா்களை பாடையில் கட்டி வந்தவாசி கோட்டை மூலை பகுதியிலிருந்து வட்டாட்சியா் அலுவலகம் வரை ஊா்வலமாக எடுத்துச் சென்றனா்.
பின்னா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் அழுகிய நெல் பயிா்களுக்கு ஈமச்சடங்கு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் ஈமச்சடங்கு செய்ய பயன்படுத்தப்பட்ட பானை, அரிசி, பால் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனா்.