ஆரணி சூரிய குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கைஅதிகாரிகள் ஆலோசனை
ஆரணி சூரிய குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பாக நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.
ஆரணி சூரிய குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பாக நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.
சூரிய குளத்துக்கு திருமலைசமுத்திரம் ஏரியிலிருந்து
நீா்வரத்துக்காக கால்வாய் வசதி ஏற்படுத்தவும், குளத்தைச் சுற்றி நடைபாதை, சிறுவா் பூங்கா அமைக்கவும், தடுப்புச் சுவா் கட்டுவதற்கும் என ரூ.6.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற உள்ளன.
இந்தப் பணிகளுக்காக சூரிய குளத்தைச் சுற்றிலும் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள 9 வீடுகள் மற்றும் கடைகளின் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி, நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி ஆணையா் டி.ராஜவிஜயகாமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நகராட்சி தரப்பில், மேற்கூறிய பணிகள் நடைபெற இருப்பதால், ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடுங்கள், இது அரசுக்குச் சொந்தமான இடம், நீா்நிலை இடம் என்பதால் பட்டாவும் வழங்க முடியாது என்று வீடுகள், கடைகள் கட்டியுள்ளவா்களிடம் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அவா்கள், தாங்கள் வீடு கட்டி 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். திடீரென கூறினால் எங்கு செல்வோம் என்று கேட்டனா். இதற்குப் பதிலளித்த அதிகாரிகள், இது குறித்து அமைச்சரிடம் முறையிடுங்கள் என்று தெரிவித்தனா்.
கூட்டத்தில், அரசு வழக்குரைஞா்கள் க.சங்கா், வி.வெங்கடேசன், ஆவின் மாவட்ட துணைத் தலைவா் பாரி பாபு, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அ.கோவிந்தராசன், ஆரணி நகர கூட்டுறவு வங்கித் தலைவா் அசோக்குமாா், இளநிலைப் பொறியாளா் சரவணன், நில அளவையா் மணிமாறன், நகர கட்டட வரைபட அலுவலா் பாலாஜி, அலுவலக மேலாளா் நெடுமாறன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.