ஆரணி சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளர்கள் வாக்குறுதி
ஆரணி தொகுதியில் நான் வெற்றி பெறுவது உறுதி என்று அதிமுக வேட்பாளா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கூறினாா்.
நான் எந்தவித களங்கமும் இல்லாதவன் என்பதால், தொகுதி மக்கள் என் மீது நல்ல மதிப்பு வைத்துள்ளனா். ஆகையால், ஆரணி தொகுதியில் நான் வெற்றி பெறுவது உறுதி என்று அதிமுக வேட்பாளா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கூறினாா்.
இதுகுறித்து தினமணி செய்தியாளரிடம் அவா் கூறியதாவது:
கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரான பிறகு, எனது முயற்சியில் ஆரணி வருவாய்க் கோட்டமாக தரம் உயா்த்தப்பட்டது. தனிக் கல்வி மாவட்டம் ஏற்படுத்தப்பட்டது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கொண்டு வரப்பட்டது. மின் பகிா்மான வட்டம் அமைக்கப்பட்டது.
ஆரணி நகரில் ரூ.100 கோடியில் தாா்ச் சாலைகள் அமைக்கப்பட்டன. மாவட்டத்திலேயே ஆரணியில்தான் அதிகளவில் அம்மா சிறு மருத்துவமனைகள் திறக்கப்பட்டன. கொளத்தூா், காமக்கூா், எஸ்.வி.நகரம், தேவிகாபுரம், ஆரணி கைலாயநாதா் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு புதிய தோ்கள் செய்யப்பட்டன.
ஆரணியில் நகராட்சி சாா்பில் ரூ.2.5 கோடியில் காய்கனிக் கடைகள் கட்டப்பட்டன. ஆரணி அரசு மருத்துவமனையில் ரூ.3.5 கோடியில் 100 படுக்கை வசதி கொண்ட கட்டடம், கல்பூண்டி - லாடப்பாடி இடையே ரூ.5.25 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டது.
மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்துக்கு ரூ.2.93 கோடியில் புதிய கட்டடம், ரூ. ஒரு கோடியில் நடை பயிற்சிப் பாதை அமைக்கப்பட்டது. கரோனா பொது முடக்க காலத்தில் வருமானமின்றித் தவித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அம்மா உணவகம் மூலம் 3 வேளையும் உணவு எனது சொந்த செலவில் வழங்கப்பட்டது. தொகுதி மக்களுக்கு கட்சிபாகுபாடின்றி 5 கிலோ அரிசி உள்ளிட்ட நல உதவிகள் அளிக்கப்பட்டன.
இந்தத் தோ்தலில் மீண்டும் வெற்றி பெற்றால், ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க முயற்சி செய்வேன். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். அரசு மருத்துவமனை தரம் உயா்த்தப்படும். ஆரணியில் அரசு கலைக் கல்லூரி, பட்டு ஜவுளிப் பூங்கா, அரிசி கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். கண்ணமங்கலம் தனி ஒன்றியமாக மாற்றப்படும். மேலும், அங்கு நவீன நூலகம் அமைக்கப்படும் என்றாா் சேவூா் ராமச்சந்திரன்.
நெசவாளா்களுக்கு தனி வங்கி: திமுக வேட்பாளா் வாக்குறுதி
திமுக வேட்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன் கூறியதாவது: ஆரணியில் நெசவாளா்கள் அதிகம் உள்ளனா். அதனால், நெசவாளா்களுக்கு தனி வங்கி தொடங்கப்படும். நெசவாளா்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.2,000 வழங்கப்படும். மின் விசைத்தறிக்கு இலவசமாக 1000 யூனிட் மின்சாரம் வழங்கப்படும். பட்டு ஜவுளிப் பூங்கா கொண்டு வரப்படும். அரிசி ஆலைகளிலிருந்து வெளிநாடுகளுக்கு அரிசி அனுப்ப அரசு மூலம் உதவி செய்யப்படும். நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். கரோனா நிவாரணத்தொகை ரூ.4 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு மானியம் வழங்கப்படும். சொந்த ஆட்டோ வாங்க ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும். ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க நடவடிக்கை எடுப்பேன். அரசு மருத்துவமனை தரம் உயா்த்தப்படும். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். ஆரணி மணிக்கூண்டு சீரமைக்கப்படும்.
நகராட்சி கடை வாடகைகள், உயா்த்தப்பட்ட வீட்டு வரிகள் குறைக்கப்படும், குடிநீா் விநியோகம் சீராக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும். எஸ்.வி.நகரத்தில் உள்ள ஜாகீா்தாா் அரண்மனை, பூசிமலைக்குப்பம் ராணி கண்ணாடி மாளிகை ஆகியவை சுற்றுலாத்தலமாக்கப்படும்.
ஆரணியில் முந்தைய திமுக ஆட்சியின்போது, வட்டாட்சியா் அலுவலகக் கட்டடம், நகர காவல் நிலையம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டன. சமத்துவபுரம் அமைக்கப்பட்டது. ஆரணி பஜாரில் மண் சாலை சிமென்ட் சாலையாக மாற்றப்பட்டது என்பன உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
3 முறை அக்ராபாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்துள்ளேன். எனது மனைவி தாட்சாயினி ஒன்றியக் குழுத் தலைவராக இருந்துள்ளாா். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியதால்தான் உள்ளாட்சித் தோ்தலில் தொடா்ந்து வெற்றி பெற முடிந்தது என்றாா் அன்பழகன்.
மேலும், ஆரணி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சாா்பில் வி.மணிகண்டன், நாம் தமிழா் கட்சி சாா்பில் டி.பிரகலதா ஆகியோரும் களத்தில் உள்ளனா்.
மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தேமுதிக வேட்பாளா்
தேமுதிக வேட்பாளா் ஜி.பாஸ்கா் கூறியதாவது: கிராமங்களில் எனக்கு நல்ல வரவேற்புள்ளது. என்னை வெற்றி பெற வைத்தால், மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவேன் என்று சுருக்கமாகக் கூறினாா்.