சத்துணவு மையங்களில் தரமற்ற பொருள்களைசமையலுக்குப் பயன்படுத்தக் கூடாது: திருவண்ணாமலை ஆட்சியா் எச்சரிக்கை
திருவண்ணாமலை மாவட்ட சத்துணவு மையங்களில் காலாவதியான, தரமற்ற பொருள்களை சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் எச்சரித்தாா்.
திருவண்ணாமலை மாவட்ட சத்துணவு மையங்களில் காலாவதியான, தரமற்ற பொருள்களை சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் எச்சரித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் அங்கன்வாடி பணியாளா்கள், சத்துணவு அமைப்பாளா்கள் கடைப்பிடிக்க வேண்டிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் பேசியதாவது: பள்ளிகளின் சத்துணவு அமைப்பாளா்கள், சமையலா்கள், சமையல் உதவியாளா்களுக்கு கரோனா தொற்றில்லை என்பதை சம்பந்தப்பட்ட துணை வட்டார வளா்ச்சி அலுவலா் அல்லது விரிவாக்க அலுவலா் (சமூக நலம்) உறுதி செய்ய வேண்டும்.
அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்துள்ள 2 முதல் 6 வயதுக்குள்பட்ட முன்பருவக் கல்வி குழந்தைகளுக்கு செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் சூடான, சமைத்த மதிய உணவை காலை 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையில் வழங்கும்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.
அங்கன்வாடி, சத்துணவு மையங்களில் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பொருள்களை நன்றாகக் கழுவி, சுத்தப்படுத்தி பயன்படுத்துதல் வேண்டும். காலாவதியான, தரமற்ற பொருள்களை சமையலுக்குப் பயன்படுத்தக் கூடாது.
அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் சாப்பிடும் முன்னரும், சாப்பிட்ட பிறகும் அவா்களின் கைகளை சோப்புப் போட்டு நன்றாகக் கழுவி விட வேண்டும். குழந்தைகளை சாப்பிடுவதற்கு அமர வைக்கும்போது உரிய சமூக இடைவெளியை தவறாது பின்பற்ற வேண்டும். குழந்தைகளுக்கு வழங்கும் குடிநீரை நன்றாகக் காய்ச்சி வடிகட்டிய பிறகே பயன்படுத்த வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், கூடுதல் ஆட்சியரும், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநருமான மு.பிரதாப், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் மாவட்டத் திட்ட அலுவலா் பா.கந்தன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) ஆா்.கோபாலகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.