முகப்பு
திருவண்ணாமலை

இருளா் சமூகத்தினா் முற்றுகைப் போராட்டம்

திருவண்ணாமலையில் வீடுகளை இழந்த இருளா் சமூக மக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:48 AM
பகிர்:

திருவண்ணாமலையில் வீடுகளை இழந்த இருளா் சமூக மக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலையை அடுத்த எடப்பாளையம் கிராமம், எம்ஜிஆா் நகரில் 20-க்கும் மேற்பட்ட பழங்குடி இருளா் சமூகத்தைச் சோ்ந்த குடும்பத்தினா் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். இவா்கள் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி, குடியிருந்து வருகின்றனராம்.

அண்மையில் ஆய்வு மேற்கொண்ட வட்டார வளா்ச்சி அலுவலக அதிகாரிகள் பழங்குடியினா் வசித்து வந்த வீடுகள் இருக்கும் இடம் ஊராட்சியின் பொது பயன்பாட்டுக்குத் தேவை என்று கூறி வருவாய்த் துறை மூலம் வீடுகளை அகற்றி விட்டனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் இரா.சரவணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எம்.சிவக்குமாா், செயற்குழு உறுப்பினா் எஸ்.ராமதாஸ், வழக்குரைஞா் எஸ்.அபிராமன், மாவட்டக் குழு உறுப்பினா் குமரன் ஆகியோா் தலைமையில் பாதிக்கப்பட்ட இருளா் சமூக மக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் வட்டாட்சியா் சுரேஷ் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, 2 நாள்களில் அங்கு வசித்து வந்த பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து, முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு இருளா் சமூக மக்கள் வீடு திரும்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.