ஆரணியில் நவீன உடல் பயிற்சிக் கூடம் கட்டுமானப் பணி: எம்எல்ஏ ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் உடல் பயிற்சிக் கூடத்தை எம்எல்ஏ சேவூா் எஸ்.இராமச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் உடல் பயிற்சிக் கூடத்தை எம்எல்ஏ சேவூா் எஸ்.இராமச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
கடந்த அதிமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்த சேவூா் எஸ்.இராமச்சந்திரன் முயற்சியில், மாநிலங்களவை உறுப்பினா் நவநீதகிருஷ்ணனின் 2018 - 19ஆம் நிதியாண்டு வளா்ச்சி நிதியிலிருந்து ரூ.50 லட்சத்தில் ஆரணி நகராட்சி அலுவலகம் அருகில் நவீன உடல் பயிற்சிக் கூடம் கட்டப்பட்டு வருகிறது. இதை பாா்வையிட்ட சேவூா் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ, அங்கிருந்த நகராட்சி இளநிலை பொறியாளா் சரவணன், ஒப்பந்ததாரா் சா்குணநாதன் ஆகியோரிடம் பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்குமாறு உத்தரவிட்டாா்.
உடற்பயிற்சிக் கூடம் ரூ.37 லட்சத்தில் கட்டப்படுகிறது. அதில் உடல் பயிற்சி செய்வதற்கான இயந்திரங்கள், உபகரணங்கள் ரூ.13 லட்சத்தில் வைக்கப்பட உள்ளன. மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நவீன உடல் பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டு வருகிறது.
ஆய்வின்போது, நகராட்சி சுகாதார ஆய்வாளா் குமரவேல், அதிமுக நகரச் செயலா் எ.அசோக்குமாா், மேற்கு ஆரணி ஒன்றிய குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், மேற்கு ஆரணி ஒன்றியச் செயலா் ப.திருமால், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலா் எஸ்.பி.சரவணன், நகர மாணவரணிச் செயலா் குமரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.