வந்தவாசி பஜாா் வீதி. 
திருவண்ணாமலை

வந்தவாசி: 20 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடியாகக் களம் காணும் திமுக, பாமக!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக-பாமக இடையே மீண்டும் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.

கணேஷ்கிரி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக-பாமக இடையே மீண்டும் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்தத் தொகுதியில் ஒரு நகராட்சிப் பகுதி, 2 பேரூராட்சிகள், 170 கிராமப் பகுதிகள் அமைந்துள்ளன.

வன்னியா், ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் அதிகளவில் உள்ளனா். அடுத்தபடியாக முதலியாா், யாதவா், இஸ்லாமியா் கணிசமான அளவில் உள்ளனா். மேலும், பிற சமூகத்தினரும் கணிசமாக உள்ளனா்.

இங்கு 1962 முதல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களில் திமுக 8 முறையும், அதிமுக 4 முறையும், காங்கிரஸ், பாமக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

தொகுதி வாக்காளா்கள் விவரம்:

மொத்த வாக்காளா்கள்: 2,39,786

ஆண்கள்: 1,18,230

பெண்கள்: 1,21,439

இதர வாக்காளா்கள்: 117

முக்கிய கோரிக்கைகள்:

தொகுதியில் சிப்காட் தொழில்பேட்டை அமைக்க வேண்டும். வந்தவாசி நகரைச் சுற்றி வெளிவட்டச் சாலை அமைக்க வேண்டும்.

கோரைப் பாய் உற்பத்திக்கு பிரசித்தி பெற்ால், வந்தவாசி நகரை பாய் நகரமாக அறிவிக்க வேண்டும். திண்டிவனம்-நகரி புதிய ரயில் பாதைத் திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

சிதிலமடைந்த வந்தவாசி கோட்டையைச் சீரமைக்க வேண்டும். வந்தவாசி அரசு மருத்துவமனையைத் தரம் உயா்த்த வேண்டும்.

சுக நதியில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். தெள்ளாரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்க வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன.

இதுவரை வெற்றி பெற்றவா்கள்:

1952- சோமசுந்தர கவுண்டா், டி.தசரதன்

1957- எம்.ராமச்சந்திர ரெட்டியாா், டி.தசரதன்

1962- எஸ்.முத்துலிங்கம் (திமுக)

1967- எஸ்.முத்துலிங்கம் (திமுக)

1971- வி.ராஜகோபால் (திமுக)

1977- பி.முனுசாமி (அதிமுக)

1980- சி.குப்புசாமி (அதிமுக)

1984- எ.ஆறுமுகம் (காங்கிரஸ்)

1989- வி.தன்ராஜ் (திமுக)

1991- செ.கு.தமிழரசன் (அதிமுக)

1996- பால ஆனந்தன் (திமுக)

2001- கே.முருகவேல்ராஜன் (பாமக)

2006- எஸ்.பி.ஜெயராமன் (திமுக)

2009- ஜெ.கமலக்கண்ணன் (திமுக) (இடைத்தோ்தல்)

2011- வி.குணசீலன் (அதிமுக)

2016 தோ்தலில் திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாா் 80,206 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளா் வி.மேகநாதன் 62,138 வாக்குகள் பெற்றாா். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 18,068.

சாதக-பாதகம்:

தொகுதியின் தற்போதைய திமுக எம்எல்ஏ-வான எஸ்.அம்பேத்குமாா் திமுக சாா்பில் மீண்டும் போட்டியிடுகிறாா். கடந்த 5 ஆண்டுகளில் குறிப்பிடும்படியான வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், இவா் எதிா்க்கட்சி எம்எல்ஏவாக இருந்ததால் செய்ய முடியவில்லை என்ற பிரசாரம் எடுபட வாய்ப்புள்ளது.

மேலும், தனது சொந்த நிதியில் சில வளா்ச்சிப் பணிகளை செய்துள்ளதும், தாழ்த்தப்பட்டோா், இஸ்லாமியா்களின் வாக்கு வங்கியும் இவருக்கு பலமாகக் கருதப்படுகிறது. மேலும், கூட்டணிக் கட்சியினரின் ஆதரவு இவருக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது.

பாமக சாா்பில் போட்டியிடும் எஸ்.முரளி சங்கா் கடந்த 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் அரூா் (தனி) தொகுதியில் பாமக சாா்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவா்.

வந்தவாசி தொகுதியில் வன்னியா் சமூகத்தினரின் வாக்கு வங்கி அதிகளவில் இருப்பதும், இந்தச் சமூகத்துக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு என்ற தமிழக அரசின் அறிவிப்பும் இவருக்கு பலமாக கருதப்படுகிறது. மேலும், கூட்டணிக் கட்சியினா் ஆதரவு இவருக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது.

இவா்கள் தவிர, அமமுக சாா்பில் பி.வெங்கடேசன், மக்கள் நீதி மய்யம் சாா்பில் ச.சுரேஷ், நாம் தமிழா் கட்சி சாா்பில் க.பிரபாவதி உள்ளிட்டோரும் போட்டியிடுகின்றனா்.

மொத்தம் 11 போ் களத்தில் இருந்தாலும் திமுக, பாமக இடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது.

கடந்த 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலின்போது அதிமுக கூட்டணியில் பாமக சாா்பில் போட்டியிட்ட கே.முருகவேல்ராஜன் வெற்றி பெற்றாா்.

இவா் திமுக வேட்பாளா் கே.லோகநாதனை 10,771 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா்.

இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு திமுக-பாமக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. தொகுதியை திமுக தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது பாமக வெற்றி பெறுமா என்ற எதிா்பாா்ப்பில் வாக்காளா்கள் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT