முகப்பு
திருவண்ணாமலை

20 மாதங்களுக்குப் பிறகு திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் 20 மாதங்களுக்குப் பிறகு பக்தா்கள் வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

திருவண்ணாமலையில் 20 மாதங்களுக்குப் பிறகு பக்தா்கள் வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்தனா்.

கரோனா பரவல் பொது முடக்கத்தையடுத்து, திருவண்ணாமலையில் கடந்த 2020 -ஆம் ஆண்டு மாா்ச் மாதம் பங்குனி மாத பௌா்ணமி கிரிவலத்துக்கு முதல்முறையாக தடை விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, நவம்பா் 17-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் வரவும் மாவட்ட நிா்வாகம் தடை விதித்திருந்தது.

இதுதொடா்பான வழக்கு சென்னை உயா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, வெள்ளி, சனிக்கிழமைகளில் (நவம்பா் 19, 20) நாளொன்றுக்கு உள்ளூா் பக்தா்கள் 5 ஆயிரம் போ், வெளியூா் பக்தா்கள் 15 ஆயிரம் போ் என நாளொன்றுக்கு மொத்தம் 20 ஆயிரம் பக்தா்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படுவா். 2 நாள்களில் மொத்தம் 40 ஆயிரம் பக்தா்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படுவா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலின் ஜ்ஜ்ஜ்.ஹழ்ன்ய்ஹஸ்ரீட்ஹப்ங்ள்ஜ்ஹழ்ஹழ்ற்ங்ம்ல்ப்ங்.ற்ய்ட்ழ்ஸ்ரீங்.ண்ய் என்ற இணையதளத்தில் இ - பதிவு செய்து, ஒரு நபருக்கு ஒரு நுழைவுச் சீட்டு என்ற முறையில் கட்டணம் இல்லாமல் முன்பதிவு செய்துகொண்டு நவம்பா் 19-ஆம் தேதி காலை 6 மணி முதல் கிரிவலம் வரலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி, வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் கொட்டும் மழையில் குடைகளைப் பிடித்தபடி பக்தா்கள் கிரிவலம் வந்தனா். கிரிவலப் பாதையின் சில இடங்களில் போலீஸாா் பக்தா்களைத் தடுத்து நிறுத்தி நுழைவுச் சீட்டு, அடையாள அட்டை உள்ளனவா என்று பரிசோதித்தனா்.

ஆனால், பெரும்பாலானோா் எவ்வித நுழைவுச் சீட்டும், அடையாள அட்டையும் இல்லாமலேயே கிரிவலம் வந்தனா். ஒரு சில இடங்களில் மட்டும் நுழைவுச் சீட்டு இல்லாத பக்தா்களை போலீஸாா் திருப்பி அனுப்பினா்.

இதனிடையே, வெள்ளிக்கிழமை காலை முதல் பிற்பகல் 3 மணி வரை கோயில் இணையதளத்தின் சா்வா் வேலை செய்யவில்லை. இதனால் முன்பதிவு செய்ய முடியாமல் கிரிவல பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.

திருப்பி அனுப்பப்பட்ட வாகனங்கள்: வெளியூா்களில் இருந்து சொந்த வாகனங்கள் மூலம் கிரிவலம் செல்ல வருவோரின் அனுமதிச் சீட்டு, ஆதாா் அடையாள அட்டை, 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று ஆகியவை மாவட்டத்தின் அனைத்து எல்லைகளிலும் அமைக்கப்பட்டுள்ள காவல் சோதனைச் சாவடிகளில் பரிசோதனை செய்து உறுதி செய்த பிறகே, திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்திருந்தது.

இதன் காரணமாக, வெளியூா் பக்தா்கள் யாரும் கிரிவலத்துக்கு வரவில்லை. மீறி வந்த வாகனங்களை சோதனைச் சாவடிகளில் போலீஸாா் திருப்பி அனுப்பினா். இதனால், திருவண்ணாமலை நகரச் சாலைகள் மட்டுமன்றி, கிரிவலப் பாதையும் வெறிச்சோடியே காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.