விநாயகா் சதுா்த்தி: வீடுகளில் சிலை வைத்து வழிபாடு
விநாயகா் சதுா்த்தியையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே விநாயகா் சிலைகளை வைத்து வெள்ளிக்கிழமை வழிபட்டனா்.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே விநாயகா் சிலைகளை வைத்து வெள்ளிக்கிழமை வழிபட்டனா். கிராமப் பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களில் மட்டும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
கரோனா பொது முடக்கம் காரணமாக பொது இடங்களில் விநாயகா் சிலைகளை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்துள்ளது. எனவே, மாவட்டத்தில் வழக்கமாக சிலைகள் வைத்து வழிபடும் இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்கப்படவில்லை.
அருணாசலேஸ்வரா் கோயில் மூடல்: வழக்கமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் தரிசனத்துக்கு பக்தா்களை அனுமதிக்காமல் மூடப்படுகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமை கோயில் மூடப்பட்டிருந்தது.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, கோயில் கொடிமரம் அருகே உள்ள ஸ்ரீசம்பந்த விநாயகரை வழிபட வந்த பக்தா்கள், கோயில் ராஜகோபுரம் எதிரே கற்பூரம் ஏற்றி வழிபட்டுச் சென்றனா்.
திருவண்ணாமலை இரட்டைப் பிள்ளையாா் கோயில், கிரிவலப்பாதை இடுக்குப் பிள்ளையாா் கோயில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறு, சிறு கோயில்களில் உள்ள விநாயகா் சந்நிதிகளில் வெள்ளிக்கிழமை காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதில், அந்தந்தப் பகுதி பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
வந்தவாசி: வந்தவாசி நகரில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில், ஓம் சிவசக்தி விநாயகா் கோயில், ஸ்ரீசுந்தரமூா்த்தி விநாயகா் கோயில், வழித்துணை விநாயகா் கோயில் உள்ளிட்டவற்றில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும், வந்தவாசியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விநாயகா் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வீடுகளில் வழிபாடு: மாவட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே விநாயகா் சதுா்த்தியை கொண்டாடினா். இதற்குத் தேவையான சிறிய அளவிலான விநாயகா் சிலைகள், எருக்கம்பூ மாலை, பழங்கள் உள்ளிட்ட பூஜைப் பொருள்களை கடைகளில் இருந்து வாங்கிச் சென்றனா்.