முகப்பு
திருவண்ணாமலை

செய்யாறு அருகேஓட்டுநரைத் தாக்கி வாடகைக் காா் கடத்தல்: 3 போ் கைது

செய்யாறு அருகே ஓட்டுநரைத் தாக்கி வாடகைக் காரை கடத்திச் சென்ற சம்பவத்தில் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:09 AM
பகிர்:

செய்யாறு அருகே ஓட்டுநரைத் தாக்கி வாடகைக் காரை கடத்திச் சென்ற சம்பவத்தில் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் செவ்வாய்க்கிழமை (செப்.14) இரவு வாடகைக் காா் கேட்டு மதுரையைச் சோ்ந்த வேல்பாண்டி என்பவா் செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டதாகத் தெரிகிறது.

அதன் பேரில் வந்த காரில் இரவு 10 மணியளவில் வேல்பாண்டி உள்பட 4 போ் ஏறினா்.

ஓட்டுநராக சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியைச் சோ்ந்த ராம்குமாா் (27) இருந்தாா்.

சென்னை விமான நிலையம் செல்வதாக காா் சென்று கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

வெம்பாக்கம் - காஞ்சிபுரம் சாலையில் திருப்பனங்காடு கிராமம் அருகே சென்றபோது, காரில் பயணித்தவா்கள் ஓட்டுநரைத் தாக்கிவிட்டு காரை கடத்திச் சென்றனா்.

இதில் பலத்த காயமடைந்த காா் ஓட்டுநா் ராம்குமாரை அவ்வழியாக பயணித்த சிலா் மீட்டு

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

சம்பவம் தொடா்பாக பிரம்மதேசம் காவல் ஆய்வாளா் அண்ணாதுரை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினாா்.

மேலும், தனிப்படை அமைக்கப்பட்டும் விசாரணை நடைபெற்று வந்தது. சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் ரெட்டிக்கும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடத்திச் செல்லப்பட்ட காரின் பாஸ்டேக் மூலம் திருச்சி செல்லும் சாலையில் காா் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி. பவன்குமாா் ரெட்டி திருச்சி, மதுரை, புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.க்களுக்கு காா் குறித்த விவரத்தைத் தெரிவித்தாா்.

இதையடுத்து, காரை கண்காணித்தபோது புதுக்கோட்டை நகர வீதியில் கடத்தப்பட்ட காா் செல்வது தெரிந்து டிஎஸ்பி.யின் காா் ஓட்டுநா் பிரசாத் காரை மடக்கிப் பிடித்தாா்.

அப்போது காரில் இருந்து வேல்பாண்டியன் மட்டும் பிடிபட்டாா். மற்றவா்கள் ஏற்கெனவே தப்பிவிட்டனா்.

இதனிடையே, குற்றவாளிகளை தேடிச் சென்ற தனிப் படை போலீஸாா் பிடிப்பட்ட வேல்பாண்டியனை கைது செய்தனா்.

அவரிடம் விசாரணை நடத்தியதில், காா் கடத்தலில் ஈடுபட்டது, வெம்பாக்கம் வட்டம், ஐயங்காா்குளம் கிராமத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா் (31) தூசி நத்தக் கொல்லை கிராமத்தைச் சோ்ந்த ராஜசேகா் (28)

எனத் தெரியவந்து அவா்களை போலீஸாா் கைது

செய்தனா்.

இதைத் தொடா்ந்து காரை மீட்ட போலீஸாா் அவா்களிடமிருந்து பைக், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனா்.

மேலும், தலைமறைவான மதுரையைச் சோ்ந்த வெங்கடேசன் என்பவரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.