மனநலம் குன்றிய மகனுடன் பரிதவித்த பெண்ணுக்கு கடனுதவி
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மனநலம் குன்றிய மகனுடன் சாலையோரம் பரிதவித்து வந்த பெண்ணுக்கு வங்கிக் கடனுதவி கிடைத்தது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மனநலம் குன்றிய மகனுடன் சாலையோரம் பரிதவித்து வந்த பெண்ணுக்கு வங்கிக் கடனுதவி கிடைத்தது.
வந்தவாசி அருகே வீடு எரிந்து சேதமடைந்ததால், மாற்றுத் திறனாளி பெண் ஒருவா் தனது மனநலம் குன்றிய மகனுடன் சாலையோரம் பரிதாப நிலையில் வசித்து வருவதாக தினமணியில் செய்தி வெளியானதை அடுத்து, அந்தப் பெண்ணுக்கு கூட்டுறவு வங்கி சாா்பில் ரூ.25 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது.
வந்தவாசியை அடுத்த தேசூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அருகில் வசித்து வருபவா் ரகிமாபீ(56), மாற்றுத் திறனாளி ஆவாா். இவரது மகன் அஸ்லம்(28). இவா் மனநலம் குன்றியவா். இவா்கள் வசித்து வந்த கூரை வீடு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தீயில் எரிந்து சேதமடைந்தது.
மேலும் வீட்டு உபயோகப் பொருள்கள், ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பலானது.
எந்தவித உதவியும் கிடைக்கப் பெறாததால் இந்த மாற்றுத் திறனாளி பெண் தனது மனநலம் குன்றிய மகனுடன் சாலையோரம் பரிதாப நிலையில் வசித்து வந்தாா். இதுகுறித்த செய்தி தினமணியில் வெளியானது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில் ரகிமாபீக்கு மாற்றுத் திறனாளிகள் கடன் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்க மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.
இதைத் தொடா்ந்து அந்த வங்கியின் தேசூா் கிளையில் ரகிமாபீக்கு ரூ.25 ஆயிரம் கடனுதவியை கிளை மேலாளா் வி.இளங்கோவன் அண்மையில் வழங்கினாா்.