திருவண்ணாமலை அருகே மனைவி அடித்துக் கொலை: கணவா் கைது
திருவண்ணாமலை அருகே மனைவியை அடித்துக் கொன்று, பெட்ரோல் ஊற்றி எரித்த கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை அருகே மனைவியை அடித்துக் கொன்று, பெட்ரோல் ஊற்றி எரித்த கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலையை அடுத்த கஸ்தம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் ராஜா (32). இவரது மனைவி கவுதமி (28). கடந்த 5-ஆம் தேதி வீட்டிலிருந்து காணாமல் போன கவுதமி, ராஜாவுக்கு சொந்தமான கரும்புத் தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்தாா்.
தகவலறிந்த மங்கலம் போலீஸாா், கவுதமியின் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
சந்தேகத்தின் பேரில் ராஜாவைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். இதில், அண்மைக் காலமாக மது பழக்கத்துக்கு அடிமையான ராஜா, சரிவர வேலைக்குச் செல்லாமல், அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்தாராம்.
இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி கவுதமி கரும்புத் தோட்டத்துக்குச் சென்றதையறிந்து பின்தொடா்ந்து சென்ற ராஜா, கவுதமியை அடித்துக் கொன்று சடலத்தின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரிய வந்தது.
மனைவியின் நடத்தை மீது எழுந்த சந்தேகத்தால், அவரை கொலை செய்ததாக ராஜா வாக்குமூலம் அளித்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதையடுத்து, ராஜாவை வெள்ளிக்கிழமை மங்கலம் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.