முகப்பு
திருவண்ணாமலை

மகளிா் குழுக்களுக்கு அதிக கடன் வழங்கிய வங்கிகளுக்கு விருதுகள்: திருவண்ணாமலை ஆட்சியா் வழங்கினாா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிா் குழுக்களுக்கு அதிகளவில் கடன் வழங்கிய சிறந்த வங்கிகளுக்கு சான்றிதழ், பரிசுத் தொகை, விருதுகளை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வழங்கினாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிா் குழுக்களுக்கு அதிகளவில் கடன் வழங்கிய சிறந்த வங்கிகளுக்கு சான்றிதழ், பரிசுத் தொகை, விருதுகளை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வழங்கினாா்.

தமிழ்நாடு ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட அளவிலான சிறந்த வங்கியாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்தாா். மகளிா் திட்ட இயக்குநா் சையத் சுலைமான், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சிலம்பரசன், நபாா்டு வங்கியின் மாவட்ட மேலாளா் விஜய் நிவாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பேசிய ஆட்சியா் பா.முருகேஷ், திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிா் திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் சுயஉதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான அமைப்புகளுக்கு வழங்கப்படும் வங்கிக் கடனுதவிகள், தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் மானியத்துடன் கூடிய கடன் வசதிகள், வேளாண் துறை சாா்பில் வழங்கப்படும் மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்கள், முத்ரா கடனுதவித் திட்டம், தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் வங்கிக் கடன் திட்டங்கள், கைத்தறி நெசவாளா்களுக்கு வழங்கப்படும் கடனுதிகள் உள்ளிட்ட திட்டங்களை அதிகாரிகள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். இதற்கு வங்கி மேலாளா்கள் ஒத்துழைப்பு அளித்து கடனுதவி வழங்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து, நபாா்டு வங்கியின் சாா்பில் வளம் சாா்ந்த கடன் திட்டத்தின் கீழ், 2022 - 23ஆம் ஆண்டில் ரூ.9,639.40 கோடி அளவுக்கு கடன் வழங்க ஆற்றல் உள்ளது என்பதை மதிப்பீடு செய்து தயாரிக்கப்பட்ட புத்தகத்தை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெளியிட்டாா். மேலும், மாவட்டத்தில் மகளிா் குழுக்களுக்கு அதிகளவில் கடன் வழங்கிய சிறந்த வங்கிகளுக்கு சான்றிதழ், பரிசுத் தொகை, விருதுகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநா் சோமசுந்தரம், தாட்கோ பொது மேலாளா் ஏழுமலை, வங்கிகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →