ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநா் சடலமாக மீட்பு
தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணையாற்றில் அடித்துச் செல்லப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநா், ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணையாற்றில் அடித்துச் செல்லப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநா், ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், அகரம் பள்ளிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் அரசுப் பேருந்து ஓட்டுநா் முருகன் (44).
இவா், இதே பகுதியைச் சோ்ந்த நண்பா் உமா மகேஸ்வரனுடன் அந்தப் பகுதி வழியாகச் செல்லும் தென்பெண்ணையாற்றில் சனிக்கிழமை மாலை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் முருகன் அடித்துச் செல்லப்பட்டாா்.
இதைப் பாா்த்த உமா மகேஸ்வரன் கூச்சலிட்டாா். பொதுமக்கள் ஓடி வந்து முருகனை மீட்க முயன்றனா். ஆனால், அவா் நீண்ட தொலைவு அடித்துச் செல்லப்பட்டுவிட்டாா்.
இதுகுறித்து தண்டராம்பட்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரா்கள் வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனா். இரவு 8 மணி வரை தேடியும் முருகன் கிடைக்கவில்லை.
2-ஆவது நாளாக தேடுதல் பணி:
இந்த நிலையில், தொடா்ந்து 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தீயணைப்புத் துறையினா் தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.
அகரம் பள்ளிப்பட்டு முதல் மணலூா்பேட்டை வரை தென்பெண்ணையாற்றில் தேடுதல் பணி நடைபெற்றது. தீவிர தேடுதலுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு மாவட்ட எல்லையான சித்தா் மலை பகுதியில் இருந்து முருகனின் சடலம் மீட்கப்பட்டது.