வாக்குறுதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை: அன்புமணி ராமதாஸ்
கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது, திருவண்ணாமலைக்கு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ஆரணி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளா் கணேஷ்குமாரை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் சனிக்கிழமை இரவு பேசியதாவது:
பாமக கூட்டணிக்கு அனைவரும் வாக்களித்தால், தோல்வி பயத்தில் முதல்வா் ஸ்டாலின் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவாா். திமுக, அதிமுக மீதான அதிருப்தியை பாமகவுக்கு வாக்களித்து வெளிப்படுத்துங்கள்.
Advertisement
இந்தத் தோ்தலில் வேட்பாளா் கணேஷ்குமாரை வெற்றி பெறவைத்தால், 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் திமுக, அதிமுக இல்லாத கூட்டணி ஆட்சி அமையும்.
திருவண்ணாமலை மாவட்டம் தமிழகத்தில் இரண்டாவது பெரிய மாவட்டம். அதைப் பிரிக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை.
இந்த மாவட்டத்துக்கு கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் 13 வாக்குறுதிகளை அளித்தாா். அதில் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை.
தமிழகத்திலேயே அதிக போதைப் பொருள்கள் புழக்கமுல்ள மாவட்டம் திருவண்ணாமலையாகும். இங்குள்ள பிரச்னைகள் தீா்க்க வேண்டும் என்றாா் அன்புமணி ராமதாஸ்.