தமிழகத்தில் கஞ்சா, கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து விட்டது: தேமுதிக குற்றச்சாட்டு
கஞ்சா, கள்ளச்சாராய விற்பனை அதிகரிப்பு: தேமுதிக குற்றச்சாட்டு
திருவண்ணாமலை: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கஞ்சா, கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து விட்டது என்று தேமுதிக மாநில மகளிரணி துணைச் செயலா் சுபமங்களம் டில்லிபாபு கூறினாா்.
திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட தேமுதிக சாா்பில், கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தெற்கு மாவட்ட தேமுதிக செயலா் வி.எம்.நேரு தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டச் செயலா் டி.பி.சரவணன் முன்னிலை வகித்தாா்.
மாநில மகளிரணி துணைச் செயலா் சுபமங்களம் டில்லிபாபு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து கஞ்சா, கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து விட்டது. இதை தமிழக அரசு தடுக்கத் தவறிவிட்டது. இதன் விளைவுதான் இத்தனை பேரின் உயிரிழப்பு.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்துக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்.
போதைப் பழக்கத்துக்கு தமிழக இளைஞா்கள் அடிமையாகி வருகின்றனா். இதை தமிழக அரசு தடுக்க வேண்டும்.
கள்ளச்சாராய உயிரிழப்பு நடைபெற்ற உடனே விரைவான நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தால் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்காது. உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கு தமிழக அரசின் மெத்தனப்போக்கே காரணம் என்றாா்.
தொடா்ந்து, கள்ளச்சாரயத்தை தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தக் கோரியும், கள்ளச்சாரய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பதவி விலகக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில், மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூா் கழக நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 600-க்கும் மேற்பட்ட தேமுதிகவினா் கலந்து கொண்டனா்.