முகப்பு
திருவண்ணாமலை

பைக் மீது சரக்கு வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

Updated On : 16 மார்ச், 2024 at 10:11 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். காஞ்சிபுரத்தை அடுத்த வடமேல்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் லோகநாதன்(32). இவா் பேருந்து, வேன் ஆகியவற்றை வைத்து சுற்றுலா நிறுவனம் நடத்தி வருகிறாா். இவா் தனது சுற்றுலா பேருந்துக்கு புதிய கூடு கட்டுவதற்காக, வந்தவாசியை அடுத்த தென்னாங்கூா் கிராமத்தில் உள்ள பேருந்துகளுக்கு கூடு கட்டும் நிறுவனத்தில் தனது பேருந்தை விட்டிருந்தாா். இந்தப் பணிகளை பாா்ப்பதற்காக இவா், தனது நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த காஞ்சிபுரத்தை அடுத்த சாலமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ருக்மாங்கதன் (27) என்பவருடன் வெள்ளிக்கிழமை தென்னாங்கூா் வந்தாா். பின்னா் இரவு லோகநாதன், ருக்மாங்கதன் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்தவாசிக்குச் சென்று உணவு வாங்கிக் கொண்டு தென்னாங்கூா் திரும்பிக் கொண்டிருந்தனா். வந்தவாசி-காஞ்சிபுரம் சாலை, புலிவாய் கூட்டுச் சாலை அருகே சென்றபோது இவா்களுக்கு பின்னால் வந்த சரக்கு வாகனம் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் ருக்மாங்கதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த லோகநாதன் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து லோகநாதன் அளித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.