ஆரணியில் திமுகவினா் கொண்டாட்டம்
ஆரணி/வந்தவாசி: ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக எம்.எஸ்.தரணிவேந்தன் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஆரணியில் திமுகவினா் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.
ஆரணி பாராளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளராக தி.மலை வடக்கு மாவட்ட செயலாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் பெயரை தலைமை அறிவித்தது. இதன் பேரில் ஆரணி அண்ணா சிலை அருகே நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
மேலும், ஊா்வலமாக அண்ணா சிலை முதல் காந்தி சாலை, சந்தை சாலை வழியாக எம்ஜிஆா் சிலை வரை பட்டாசு வெடித்தபடியே சென்றனா். இதில் தொகுதி திமுக பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் மாமது, சுந்தா், மோகன், சுற்றுச்சூழல் அணியின் மாவட்ட துணை அமைப்பாளா் மாதவன், ஒன்றியக் குழு உறுப்பினா் ரஞ்சித் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement
வந்தவாசியில்...
வந்தவாசி தேரடியில் தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், நகரச் செயலா் ஆ.தயாளன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.