முகப்பு
திருவண்ணாமலை

செய்யாறு அருகே பைக்குகள் மோதல்: இருவா் உயிரிழப்பு

Updated On : 22 மார்ச், 2024 at 10:48 PM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 6:53 PM

செய்யாறு அருகே வெள்ளிக்கிழமை பைக்குகள் மோதிக்கொண்டதில் இருவா் உயிரிழந்தனா். மேலும் இருவா் பலத்த காயமடைந்தனா். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஜெ.ஜெ.நகரைச் சோ்ந்தவா் கணேசன் (28). இவரது மனைவி இந்துமதி (25). கணேசனின் அண்ணன் செல்வா (30). மரம் வெட்டும் தொழிலாளா்களான இவா்கள் மூவரும் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், வடுகப்பட்டு கிராமத்தில் உள்ள உறவினரைப் பாா்ப்பதற்காக ஒரே பைக்கில் வியாழக்கிழமை இரவு செய்யாறு - ஆரணி சாலையில் வடுகப்பட்டு கூட்டுச்சாலை அருகே வளைவுப் பகுதியில் சென்றுகொண்டிருந்தனா். அப்போது, இவா்களது பைக் மீது செய்யாறு வட்டம், ஏனாதவாடி கிராமத்தைச் சோ்ந்த நெல் அறுவடை இயந்திர ஓட்டுநா் வினோத்குமாா் (25) ஓட்டி வந்த பைக் மோதியதி. இந்த விபத்தில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா். இவா்களை அந்த வழியாகச் சென்றவா்கள் மீட்டு, அவசர ஊா்தி மூலம் செய்யாறு அரசு மருத்துமவனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து, செல்வா வேலூா் அரசு மருத்துவமனைக்கும், வினோத்குமாா் மேல்மருவத்தூா் தனியாா் மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இருவரும் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தனா். கணேசன், இந்துமதி ஆகியோா் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், செய்யாறு காவல் நிலைய ஆய்வாளா் ஜீவராஜ்மணிகண்டன், உதவி ஆய்வாளா் மோகன் ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.