போக்குவரத்து காவலா்களுக்கு தொப்பி, கண் கண்ணாடி
திருவண்ணாமலை நகரில் பணிபுரியும் போக்குவரத்து காவலா்கள் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தொப்பி, கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. திருவண்ணாமலை நகர போக்குவரத்து காவல்துறையில் 50-க்கும் மேற்பட்ட காவலா்கள் பணியாற்றி வருகின்றனா். நகரில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. எனவே, கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து போக்குவரத்து காவல்துறையினா் தங்களை தற்காத்துக் கொள்ள உரிய அறிவுரைகளை மாவட்ட எஸ்பி வழங்கி வருகிறாா். இந்த நிலையில், புதன்கிழமை போக்குவரத்து காவலா்களுக்கு தொப்பிகள், கண் கண்ணாடிகள் மற்றும் மோா் ஆகியவற்றை மாவட்ட எஸ்பி கி.காா்த்திகேயன் வழங்கினாா். மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நகர உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் பி.ரவிச்சந்திரன், மாவட்ட தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் தயாளன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.