மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கு அடிப்படை வசதிகள்: ஆட்சியா் உத்தரவு
திருவண்ணாமலை மாவட்ட வாக்குச் சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சாய்தளம், சக்கர நாற்காலி வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா். திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலின்போது, மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் எளிதில் வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடி மையங்களில் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், வாக்குச் சாவடி மையங்களில் சாய்வுத்தளம் அமைக்க வேண்டும். வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் பொருட்டு தன்னாா்வலா்களை பணியில் அமா்த்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா். கூட்டத்தில், ஆரணி மக்களவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட வருவாய் அலுவலருமான மு.பிரியதா்ஷினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கோ.குமரன் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.