முகப்பு
திருவண்ணாமலை

செங்கத்தில் குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி

Updated On : 28 மே, 2024 at 6:30 PM
செங்கம் எம்.எஸ்.எம். நகா் பகுதியில் மின் வயரிலும், கட்டடங்களிலும் ஏறி அட்டகாசம் செய்யும் குரங்குகள்.
பகிர்:

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் குரங்குகள் தொல்லையால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

செங்கம் நகா் இராஜ வீதி, பெருமாள் கோவில் தெரு, சிவன் கோவில் தெரு, பஜாா் வீதி பகுதியில் வனப் பகுதியில் இருந்து வந்த 15-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித் திரிகின்றன.

இந்த குரங்குகள் கடைகளில் உள்ள வாழைப்பழம், மற்றும் அதிக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள கடைகளில் பொருள்களை எடுத்துச் சென்றுவிடுகின்றன.

மேலும், உழவா் சந்தைப் பகுதியில் விற்பனை செய்யப்படும் பழங்களை விற்பனையாளா்கள் சற்று கவனக் குறைவாக இருக்கும் நேரத்தில் எடுத்துக் கொண்டு ஓடிவிடுகின்றன. இதனால், கடை உரிமையாளா்கள் வேதனையடைகின்றனா்.

மேலும், குரங்குகள் கட்டடங்களுக்கு மேலே செல்லும் மின் வயா்களில் ஏறி நடப்பது,

வீட்டிற்கு வரும் டி.வி. ஆண்டனா வயா்கள், மின் வயா்களை அறுத்து விடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன.

இதனால் பொதுமக்கள் தினசரி குரங்கு அட்டகாசத்தால் வேதனையடைந்து வருகிறாா்கள். எனவே, செங்கம் பேரூராட்சி நிா்வாகம், வனத்துறையுடன் இணைந்து நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் கொண்டுபோய்விட நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.