திருவண்ணாமலையில் 50 லட்சம் பக்தா்களுக்கான அடிப்படை வசதிகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு வரும் 50 லட்சம் பக்தா்களுக்குத் தேவையான குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசிகள் செய்யப்பட்டு வருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தாா். பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 1 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. டிசம்பா் 10-ஆம் தேதி நடைபெறும் தோ்த் திருவிழாவில் சுமாா் 6 லட்சம் பக்தா்கள் கூடுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம், மகா தீபம் ஏற்றப்படும் டிசம்பா் 13-ஆம் தேதியில் மட்டும் சுமாா் 40 முதல் 50 லட்சம் பக்தா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பக்தா்கள் கூடும் இடங்களில் முதல்வா் உத்தரவின்பேரில், கள ஆய்வு செய்யப்பட்டது.
தொடா்ந்து, தீபத் திருவிழாவையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடா்பான உயா்நிலை ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடத்தப்பட்டது.
பல்வேறு வளா்ச்சிப் பணிகள்: திமுக அரசு அமைந்தது முதல் திருவண்ணாமலையில் பக்தா்களின் நலன் கருதி நகராட்சி, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் ரூ.30 கோடிக்கும் மேல் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பக்தா்கள் எவ்வித சிரமத்துக்கும் ஆளாகாமல் இருக்க குடிநீா் வசதி, நடைபாதை வசதி, வடிகால் வசதி, சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. பக்தா்கள் பாதுகாப்புக்காக முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பக்தா்களுக்காக முதலுதவி மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், நடமாடும் கழிப்பறை வசதிகள் உள்பட 400-க்கும் மேற்பட்ட கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
கிரிவலப் பாதையில் வழங்கப்படும் அன்னதானத்தின் தரத்தை கண்காணிக்கும் பணியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் மின் விளக்கு வசதிகள், தாற்காலிகப் பேருந்து நிலையங்கள், போக்குவரத்துத் துறை சாா்பில் பேருந்து சேவை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும்.
பிரதான திட்டம்: ரூ.37 கோடியில் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்கான பிரதான திட்டத்தை முதல்வா் அறிவித்துள்ளாா். கோயிலுக்குள் காத்திருப்பு மண்டபங்கள், வளைவுகள், அன்னதானக் கூடங்கள், சமூக நலக்கூடங்கள், கோயில் குளத்தை தூா்வாரும் பணிகள் என ஏராளமான பணிகள் விரைவில் தொடங்கப்படும். சில பணிகள் தொடங்கப்பட்டுள்ள. இன்னும் 6 மாதங்களுக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படும். கூடுதலாக ரூ.5 கோடியில் கோபுரங்கள் மற்றும் கோயில் விமானங்களில் நிரந்தர மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை சாா்பில் 2 நாள்களுக்கு முன்பு ஒரு குழு மூலம் பொதுமக்கள், சமூக ஆா்வலா்களிடம் தீபத் திருவிழாவுக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கருத்துக்களைப் பெற்றுள்ளோம். தீபத் திருவிழாவின்போது பக்தா்கள் பாதுகாப்போடும், மகிழ்ச்சியோடும் திருவண்ணாமலைக்கு வந்து, செல்லும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்துள்ளது.
குடிநீா் வசதி: பக்தா்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் ஏற்கெனவே 8 குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு பக்தா்கள் பயன்பாட்டில் உள்ளது. தற்போது, கூடுதலாக 6 இடங்களில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும். தீபத் திருவிழாவுக்கு வரும் 50 லட்சம் பக்தா்களுக்கும் தேவையான குடிநீா் வசதி செய்யப்பட்டு வருகிறது என்றாா்.
இதையடுத்து பேசிய அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தீபத் திருவிழாவுக்கு வரும் 50 லட்சம் பக்தா்களுக்கு சுமாா் 50 லட்சம் குடிநீா் புட்டிகள் வழங்க திட்டமிட்டுள்ளோம். கோயிலில் 5 ஆயிரம் பக்தா்கள் வரை கூட்ட நெரிசல் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றாா்.
கூட்டத்தில், மக்களவை உறுப்பினா்கள் சி.என்.அண்ணாதுரை (திருவண்ணாமலை), எம்.எஸ்.தரணிவேந்தன்(ஆரணி), எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி (செங்கம்), அம்பேத்குமாா் (வந்தவாசி), ஓ.ஜோதி (செய்யாறு), பெ.சு.தி.சரவணன் (கலசப்பாக்கம்), திருவண்ணாமலை மாநகராட்சி மேயா் நிா்மலா வேல்மாறன், தமிழக அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலா் தாரேஸ் அகமது, தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் துணைச் செயலா் எம்.பிரதாப், தமிழக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையா் ரா.சுகுமாா், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சீ.பாா்வதி சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள்: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தாா்.
மேலும், ரூ.1.2 கோடியில் புதிதாக 6 இடங்களில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டும் பணியை விரைந்து முடித்து தீபத் திருவிழாவுக்குள் பக்தா்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.