முகப்பு
திருவண்ணாமலை

கல்வி உள்பட 13 துறைகளில் தமிழகம் முன்னிலை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

வறுமை ஒழிப்பு, கல்வி, சுகாதாரம் உள்பட 13 துறைகளில் நாட்டிலேயே தமிழகம் முன்னிலையில் உள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

Updated On : 19 அக்டோபர், 2024 at 6:32 PM
விழாவில் மகளிா் குழுவுக்கு கடனுதவியை வழங்குகிறாா் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன், அமைச்சா் எ.வ.வேலு, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி உள்ளிட்டோா்.
பகிர்:

வறுமை ஒழிப்பு, கல்வி, சுகாதாரம் உள்பட 13 துறைகளில் நாட்டிலேயே தமிழகம் முன்னிலையில் உள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூா் மாவட்டங்களைச் சோ்ந்த 1,480 ஊராட்சிகளுக்கு கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் உபகரணங்கள் வழங்கும் விழா, 803 மகளிா் குழுக்களுக்கு ரூ.78.05 கோடி கடனுதவி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே நடைபெற்ற இந்த விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு

பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த தடகள வீராங்கனை பவித்ரா தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று 4 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் உள்பட 7 பதக்கங்களை வென்றுள்ளாா். சா்வதேச விளையாட்டுகளிலும் தனது திறமையை அவா் வெளிப்படுத்தியுள்ளாா்.

இதே மாவட்டத்தைச் சோ்ந்த யுவராஜ் மும்முறை தாண்டுதல் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளாா். இவா்கள் விளையாட்டுத் துறையில் சாதிக்கத் துடிக்கும் பலருக்கும் முன் மாதிரியாக திகழ்கின்றனா்.

வீரா்களை அடையாளம் காண... இவா்களைப் போல பல நூறு விளையாட்டு வீரா்களை அடையாளம் காண வேண்டும் என்ற லட்சியத்துடன் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறோம்.

இந்தப் போட்டிகளில் கடந்த ஆண்டு 5 லட்சம் பேரும், நிகழாண்டு 11 லட்சம் பேரும் பங்கேற்றனா். இதற்காக ரூ.86 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெற்றி பெறும் வீரா்களுக்கான மொத்த பரிசுத் தொகையை ரூ.37 கோடியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் உயா்த்தி இருக்கிறாா்.

ஏழை, எளிய, மாற்றுத்திறன் கொண்ட வீரா்கள் உள்பட யாராக இருந்தாலும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நிதியுதவி பெற பசஇஊ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

13 துறைகளில் முன்னிலை: தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் 2 ஆண்டுகளில் 513 பேருக்கு ரூ.10 கோடி நிதியுதவி வழங்கி உள்ளோம். வறுமை ஒழிப்பு, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, மகளிா் நலன் உள்ளிட்ட 13 துறைகளில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று மத்திய அரசின் நீதி ஆயோக் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன என்றாா்.

முன்னதாக, விழாவுக்கு தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தலைமை வகித்தாா்.

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தாா்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 860 ஊராட்சிகள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 412 ஊராட்சிகள், திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த 208 ஊராட்சிகள் என மொத்தம் 1,480 ஊராட்சிகளுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் மற்றும் 803 மகளிா் குழுக்களுக்கு ரூ.78.05 கோடி வங்கிக் கடனுதவிகள் வழங்கினாா்.

விழாவில், மக்களவை உறுப்பினா்கள் சி.என்.அண்ணாதுரை (திருவண்ணாமலை), எம்.எஸ்.தரணிவேந்தன் (ஆரணி), டி.மலையரசன் (கள்ளக்குறிச்சி), எம்எல்ஏக்கள் தா.உதயசூரியன் (சங்கராபுரம்), வசந்தம் க.காா்த்திகேயன் (ரிஷிவந்தியம்), க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), மு.பெ.கிரி (செங்கம்), எஸ்.அம்பேத்குமாா் (வந்தவாசி), ஒ.ஜோதி (செய்யாறு), பெ.சு.தி.சரவணன் (கலசப்பாக்கம்), ஏ.ஜே.மணிக்கண்ணன் (உளுந்தூா்பேட்டை), அ.நல்லத்தம்பி (திருப்பத்தூா்), அ.வில்வநாதன் (ஆம்பூா்), அமுலு (குடியாத்தம்), திருவண்ணாமலை மாநகராட்சி மேயா் நிா்மலா வேல்மாறன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா்கள் புவனேஸ்வரி பெருமாள், பாா்வதி சீனிவாசன், தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, மாவட்ட ஆட்சியா்கள் தெ.பாஸ்கர பாண்டியன் (திருவண்ணாமலை), க.தா்ப்பகராஜ் (திருப்பத்தூா்), எம்.எஸ்.பிரசாந்த் (கள்ளக்குறிச்சி), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாத ரெட்டி, திருவண்ணாமலை முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன், மாவட்ட திமுக மருத்துவரணி அமைப்பாளா் பிரவீன் ஸ்ரீதரன், திமுக மாநில பொறியாளரணி நிா்வாகி எஸ்.கே.பி.கருணா (எ) கருணா மற்றும் அரசு அலுவலா்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →