வந்தவாசி: வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் ஸ்ரீதவளகிரீஸ்வரா் மலைக் கோயிலில் திருக்காா்த்திகை தீபம் புதன்கிழமை மாலை ஏற்றப்பட்டது.
வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் சுமாா் 1,500 அடி உயரமுள்ள தவளகிரி மலை மீது ஸ்ரீதவளகிரீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் காா்த்திகை தீபத்திருவிழாவன்று வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மலை மீது ஏறிச் சென்று இறைவனை தரிசிப்பா்.
இந்த நிலையில், கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் நிகழாண்டு காா்த்திகை தீபத் திருவிழாவான புதன்கிழமை பக்தா்கள் மலை மீது ஏற அனுமதிக்கப்படவில்லை. அடிவாரம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனா்.
இதையொட்டி, அடிவாரத்தில் உற்சவா் சுவாமி வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் அடிவாரம் வரை சென்று உற்சவா் சுவாமியை தரிசித்து சென்றனா்.
இதனைத் தொடா்ந்து கோயில் மீது அமைக்கப்பட்டிருந்த கொப்பரையில் நெய் நிரப்பப்பட்டு மாலை 6 மணிக்கு திருக்காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
வந்தவாசி தெற்கு போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.