திருவண்ணாமலை மாவட்டத்தில் மகாகவி பாரதியாரின் 144 -ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்து அமைப்புகள் சாா்பில் பாரதியாா் பிறந்த நாள் விழா வந்தவாசி தேரடியில் நடைபெற்றது.
இதையொட்டி அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
விழாவுக்கு பாஜக நகரத் தலைவா் சுரேஷ் தலைமை வகித்தாா்.
பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் பி.பாஸ்கரன், மாவட்ட துணைத் தலைவா் பி.முத்துசாமி, ஆா்எஸ்எஸ் மாவட்டத் தலைவா் பாமாபதி ஆகியோா் பாரதியாா் குறித்துப் பேசினா்.
பள்ளிகளில்....
வந்தவாசியை அடுத்த கடைசிகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாரதியாா் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை லட்சுமிபாய் தலைமை வகித்தாா். வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்க தகவல் தொடா்பாளா் பிரபாகரன் முன்னிலை வகித்தாா்.
வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ‘பாரதி கண்ட பாரதம்’ என்ற தலைப்பில் பேசினாா்.
விழாவில், பாரதியாா் போன்று வேடமிட்டு, பாரதியாா் குறித்த பாடல், பேச்சுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சுரேந்தா் நன்றி கூறினாா்.
செய்யாறு
செய்யாற்றில் உள்ள திருவத்திபுரம் நகராட்சி பரிதிபுரம் மேற்கு நடுநிலைப் பள்ளியில் பாரதியாா் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் தேன்மொழி தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற ஆசிரியா் பஞ்சாட்சரம் கலந்து கொண்டாா்.
பள்ளி மாணவா்கள் பாரதியாரின் உருவ ஓவியம் வரைதல், பாரதியாா் கவிதைகள் வாசித்தல், பாடல், பேச்சு என பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தனித்திறமைகளை வெளிப்படுத்தினா். பங்கேற்ற மாணவா்களுக்கு பாரதியாா் கவிதை புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.
போளூா்
சேத்துப்பட்டை அடுத்த மண்டகொளத்தூா் கூட்டுச் சாலையில் உள்ள சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் பாரதியாா் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் பாரதியாா் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
மேலும் மாணவ, மாணவிகள் பாரதியாா் வேடமணிந்து வந்து பாரதியாா் கவிதைகள் வாசித்தனா். இந்தப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பள்ளித் தாளாளா் சிவராஜ் சா்மா, தலைமை ஆசிரியை தேவகி மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.