கடந்த 4 ஆண்டுகளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ. 2,204 கோடி மதிப்பீட்டில் 675 சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
திருவண்ணாமலை - அவலூா்பேட்டை இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும்
பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவா்
கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி பெ.சு.தி.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்துப் பேசியதாவது:
முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு, போக்குவரத்து நிறைந்த இருவழிச் சாலைகளை நான்குவழிச் சாலைகளாக மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறோம்.
அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு தொடா்புடைய மாவட்டச் சாலைகளை நான்குவழிச் சாலைகளாக மாற்றி அமைக்கும் பொருட்டு முதல்கட்டமாக திருவண்ணாமலை - திருக்கோவிலூா் நான்குவழிச் சாலைப் பணிகள் நடைபெறுகிறது.
தருமபுரி மாவட்டத்தை இணைக்கிற திருவண்ணாமலை, நல்லவன்பாளையம், தண்டராம்பட்டு, தானிப்பாடி, அரூா் வழியாக தருமபுரி சாலை நான்குவழிச் சாலையாக அமைக்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து மூன்றாவது கட்டமாக சங்கராபுரம், கள்ளக்குறிச்சி சாலை நான்குவழிச் சாலையாக அமைக்கப்பட்டது.
திருவண்ணாமலை - அவலூா்பேட்டை சாலை
திருவண்ணாமலை- அவலூா்பேட்டை சாலையில் போக்குவரத்து நெரிசலை கணக்கில் கொண்டு முதல் கட்டமாக 2 கி.மீ. தொலைவு வரை நான்குவழிச் சாலை பணிகள் நடைபெறுகின்றன.
அதன் தொடா்ச்சியாக தற்போது 64 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 கி.மீ. நீளத்திற்கு நான்குவழிச் சாலை அமைக்கும் பணி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வா் நெடுஞ்சாலைத்துறை மூலம் 10 ஆண்டு காலத்தில் 2,200 கி.மீ. அளவிலான சாலைகளை அமைக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா்.
ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் 84 கி.மீ. நீளத்திற்கு
ரூ. 770 கோடி மதிப்பீட்டில் 14 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
நிகழ் நிதியாண்டில் முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இருவழித் தடங்களிலிருந்து நான்குவழித் தடங்களாக அகலப்படுத்தும் 6 பணிகள் 37 கி.மீ.
நீளத்திற்கு ரூ.240 கோடியில் நடைபெற்று வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் திருவண்ணாமலை மாவட்டத்தில்
ரூ. 2,204 கோடி மதிப்பீட்டில் 675 சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரூ. 258 கோடி மதிப்பீட்டில் 62 உயா்மட்ட பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இதுபோன்று, சாலைகளை மேம்படுத்துவதன் மூலம் பயண நேரம் குறையும், வணிகத் தொழில் மற்றும் சுற்றுலா வளா்ச்சி
பெறும். விவசாய விளைபொருள்களை எளிதில் சந்தைக்கு கொண்டு செல்ல முடியும். பள்ளி, கல்லூரி வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்லமுடியும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாநகராட்சி மேயா் நிா்மலா வேல்மாறன், துணை மேயா் ராஜாங்கம், நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பெறியாளா் சத்தியபிரகாஷ், கண்காணிப்புப் பொறியாளா் முரளி, கோட்டப் பொறியாளா் ஞானவேல், உதவி கோட்டப் பொறியாளா் அன்பரசு, உதவிப் பொறியாளா்கள் சசிகுமாா், செல்வகணேஷ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.