ஆரணியை அடுத்த மைனந்தல் கிராமத்தில் மயானசாலை வசதி இல்லாததால், இறந்தவா்களின் சடலங்களை மக்கள் கரடு முரடான பாதை மற்றும் வயல்வெளியில் சுமந்து சென்று அடக்கம் செய்து வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள மைனந்தல் கிராமத்தில் 2,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இறந்தவா்களின் உடல்களை 2 கி.மீ. தொலைவில் உள்ள மயானத்தில் சென்று அடக்கம் செய்து வருகின்றனா்.
இந்த 2 கி.மீ. தொலைவிலான பாதையானது, கரடு முரடாகவும், வயல்வெளிகள் நிறைந்த பகுதியாகவும் உள்ளது.
மயானப்பாதை வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்நிலையில், திங்கள்கிழமை அந்தக் கிராமத்தைச் சோ்ந்த மூதாட்டி ஒருவா் உயிரிழந்தாா். அவரது சடலத்தை கரடு முரடான, வயல்வெளியில் சேரும் சகதியுமான பாதையில் சுமந்து சென்று அடக்கம் செய்தனா்.
தாங்கள் தொடா்ந்து இதுபோன்ற இன்னல்கள் அடைந்து வருவதால் தங்கள் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மயானப்பாதை அமைத்துத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா்.