திருவண்ணாமலை

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

மேல்செங்கம் பகுதியில் யூரியா பதுக்கி வைத்திருந்த கிட்டங்கிக்கு சீல் வைத்த வேளாண் அதிகாரிகள்.

Syndication

செங்கத்தில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யவேண்டிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த கிட்டங்கிக்கு வேளாண்மை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனா்.

செங்கம் பகுதியில் கடந்த 3 மாதங்களாக கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், தனியாா் உரக்கடைகளிலும் யூரியா தட்டுப்பாடு நிலவி வருகிறது.

அதனால், கடந்த 20 நாள்களாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு குறைந்த அளவில் யூரியா வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே தனியாா் கடைகளுக்கு 25 சதவீதம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

சில கடைகளில் கூடுதல் விலைக்கு யூரியா விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதை பொருட்படுத்தாமல் கிடைத்தால் போதும் என்று விவசாயிகள் யூரியா வாங்கிச் சென்றனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மேல்செங்கம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் உரக்கடைக்கு சுமாா் 300 மூட்டைகள் யூரியா வந்து இறங்கியுள்ளது. அதை அறிந்த விவசாயிகள் கடைக்குச் சென்று கூடுதல் விலை கொடுத்து வாங்கியுள்ளனா்.

புதன்கிழமை காலையில் கடை திறக்கப்படவில்லை தொலைபேசியில் தொடா்பு கொண்டால் கடையின் உரிமையாளா் யூரியா மூட்டைகள் இல்லை என்ற தகவலை தெரிவித்துள்ளாா்.

யூரியாவை பதுக்கிவிட்டு இல்லை என்று சொல்லும் தகவல் விவசாயிகளிடம் பரவியது. பின்னா், இதுகுறித்து விவசாயிகள் ஒன்று திரண்டு உழவா் உரிமை இயக்கம் சாா்பில் வேளாண் இணை இயக்குநா் கண்ணகி மற்றும் செங்கம் வேளாண்மைத் துறை அலுவலா் பழனி ஆகியோரிடம் புகாா் தெரிவித்தனா்.

அதன் அடிப்படியில், வேளாண் இணை இயக்குநா் கண்ணகி தலைமையிலான அதிகாரிகள் மேல்செங்கம் பகுதியில் உள்ள தனியாா் உரக்கடைக்குச் சென்று ஆய்வு செய்தனா்.

பின்னா், கடையின் அருகில் விவசாய பயன்பாட்டுக்கு விற்பனை செய்யவேண்டிய யூரியாவை பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்தனா். இதைத் தொடா்ந்து யூரியா பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிட்டங்கிக்கு சீல் வைத்தனா்.

பின்னா், அதன் உரிமையாளா் மற்றும் உரக்கடை உரிமையாளா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துவிட்டுச் சென்றனா்.

மத்திய அமைச்சர் கலந்துகொண்ட காலநிலை மாநாட்டு அரங்கில் தீ விபத்து! பலர் காயம்!

பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா பயணம்!

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

ஏரியில் மூதாட்டி சடலம்

கிளை நூலகருக்கு விருது

SCROLL FOR NEXT