ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை செயல்படுத்தக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஆரணியை அடுத்த கல்லேரிப்பட்டு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்நிலையில் கல்லேரிப்பட்டு கிராமத்தில் ரூ.17 லட்சம் மதிப்பில் புதிதாக 30ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.
நீா்த்தேக்கத் தொட்டி கட்டி முடித்து 5 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. ஆனால், அதனை பயன்பாட்டுக்குக் கொண்டுவராமல் கிராமம் முழுவதும் குடிநீா் விநியோகம் செய்ய முடியாமல் உள்ளதாம்.
இதனால் குடிநீா் வசதியின்றி அப்பகுதி மக்கள் வட்டார வளா்ச்சி அதிகாரியிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வந்தவாசி-ஆரணி சாலையில் திடீரென செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மேலும் தங்கள் பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டியிருப்பதை செயல்படுத்தி குடிநீா் வசதி செய்து தர வேண்டும் என்று அவா்கள் கோரிக்கைகளை முன் வைத்தனா்.
இந்த நிலையில், ஆரணி டிஎஸ்பி சுரேஷ்சண்முகம், காவல் ஆய்வாளா் செந்தில்விநாயகம் மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமரச பேச்சுவாா்த்தை நடத்தினா். சாலை மறியலால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், சாலை மறியலை கைவிட மறுத்ததால் அவா்களை போலீஸாா்
வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினா். இதனால் பொதுமக்களுக்கும், காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு குடிநீா் விநியோகம் செய்ய உறுதி கொடுத்ததின் பேரில் அனைவரும் சாலை மறியலை கைவிட்டனா்.
சாலை மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.