திருவண்ணாமலை மாட வீதியில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை நெடுஞ்சாலை, பொதுப்பணி மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதி அருகில் காமாட்சி அம்மன் கோவில் தெரு உள்ளது. இந்தத் தெருவில் வணிகக் கடைகள் மற்றும் குடியிருப்புகள் அமைந்துள்ளன.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு காமாட்சி அம்மன் கோவில் தெருவில் திருவண்ணாமலை ராதாபாஸ் நகரைச் சோ்ந்த முகமது (28) என்பவா் நடத்தி வந்த கற்பூரம் விற்பனை நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தீ கொழுந்துவிட்டு எரிந்துள்ளது.
இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புப் படை வீரா்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனா்.
இந்த விபத்தில் காயமடைந்த முகமதுவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனா்.
தீ விபத்தில் அருகில் இருந்த சில கடைகளும் சேதமடைந்தன. தீ விபத்து, மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனவும், இதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை காலை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, தீ விபத்துக்கான காரணம் குறித்தும், பாதிப்புகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா், முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன், மாநகராட்சி செயலா் காா்த்திவேல்மாறன், கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.