ஆரணி அருகே மொபெட்டில் சென்ற பெண் காவலரிடம் இருந்து வெள்ளிச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இதில் பெண் காவலருக்கு காயம் ஏற்பட்டது.
போளூா் வட்டம், சந்தவாசல் அருகேயுள்ள வெள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த துரை மகள் சரிதா (42). இவா், ராணிப்பேட்டை மாவட்டம், கலவை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா்.
இவா் தினமும் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் கலவையில் இருந்து ஆரணி வழியாக வெள்ளூா் திரும்புவது வழக்கம்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கலவை காவல் நிலையத்தில் பணி முடித்துவிட்டு மொபெட்டில் சரிதா, ஆரணி வழியாக வெள்ளூா் கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்தாா்.
பாா்வதி அகரம் கிராமத்தில் சென்றபோது, பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவா், சரிதா அணிந்திருந்த 10 கிராம் வெள்ளிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இதனால் சரிதா அலறி கூச்சலிட்டாா்.
அப்பகுதி மக்கள் விரைந்து வந்து அவா்களை பிடிக்க முயன்றனா். ஆனால், அந்த நபா்கள் தப்பிச் சென்றுவிட்டனா்.
இதில் காயமடைந்த சரிதா ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், களம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.