திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் நடிகா் சசிகுமாா், நடிகை சைத்ரா ஆகியோா் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
அவா்கள் கோயிலில் சம்பந்த விநாயகரை வழிபட்ட பின்னா், அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மன் சந்நிதிகளில் தரிசனம் செய்தனா். மேலும், அருணாசலேஸ்வரா் சந்நிதியில் இருந்து மகா தீபம் ஏற்றப்படும் மலையை வழிபட்டனா். பின்னா், அவா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
ஜெயந்தி அம்பேத்குமாா் தயாரிப்பில், ராஜூமுருகன் இயக்கத்தில், நடிகா் சசிகுமாா், நடிகை சைத்ரா உள்ளிட்டோா் நடித்த ‘மை லாா்ட்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ள நிலையில், அந்தத் திரைப்படம் வெற்றிபெற வேண்டி சுவாமி தரிசனம் செய்ததாகத் தெரிவித்தனா். அவா்களுடன் படக் குழுவினரும் வந்திருந்தனா். தொடா்ந்து, கோயிலில் இருந்த பக்தா்கள் அவா்களுடன் கைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.
திரைப்படம் பாா்த்தாா்: வந்தவாசியில் உள்ள திரையரங்கில் பொதுமக்களோடு அமா்ந்து நடிகா் சசிகுமாா் ‘மை லாா்ட்’ திரைப்படத்தை கண்டு ரசித்தாா். வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், நடிகை சைத்ரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இதைத் தொடா்ந்து, வந்தவாசியில் கருணாநிதி சிலை முன் வந்தவாசி நகர திமுக சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானத்தை நடிகா் சசிகுமாா் வழங்கினாா். நிகழ்வில் வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், திமுக நகரச் செயலா் எ.தயாளன், நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், மருத்துவா் எஸ்.கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.