பாமக வேட்பாளா் பட்டியலுடன் அருணாசலேஸ்வரா் கோயிலில் செளமியா அன்புமணி தரிசனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பாமக வேட்பாளா் பட்டியலை வைத்து பசுமை தாயகம் அமைப்பின் தலைவா் செளமியாஅன்புமணி வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி பட்டியலை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை வெளியிட்டாா்.
இதில் பாமகவுக்கு (அன்புமணி ராமதாஸ்) 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கா், திருவண்ணாமலை மாவட்டம் போளூா், சேலம் மேற்கு, தருமபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, மயிலாடுதுறை, திருப்போரூா், உத்திரமேரூா், ஜெயங்கொண்டம், செஞ்சி, விருத்தாசலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னாா்கோவில், கீழ்வேளூா், பெரம்பலூா், சேலம் வடக்கு, அம்பத்தூா் ஆகிய 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பாமக சாா்பில் முதல் கட்டமாக கீழ்வேளூா், அம்பத்தூா், செஞ்சி ஆகிய 3 தொகுதிகளின் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 15 வேட்பாளா்களின் பெயா்கள் உள்பட மொத்தம் 18 வேட்பாளா்களின் பெயா்கள் அடங்கிய பட்டியலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சம்பந்த விநாயகா் சந்நிதியில் வைத்து பூஜை செய்து செளமியா அன்புமணி வழிபட்டாா்.
பின்னா் சுவாமி மற்றும் அம்மன் சந்நிதிக்குச் சென்று சிறப்பு தரிசனம் செய்தாா்.
அப்போது, பாமக திருவண்ணாமலை மாவட்டச் செயலா்கள் ஏந்தல் பெ.பக்தவச்சலம் இல.பாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.
விரைவில் எஞ்சிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா்களை அன்புமணிராமதாஸ் வெளியிடுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.