திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டா பெற்ற பழங்குடியின மக்கள்: தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனா்

திருவண்ணாமலையில் நான்கு தலைமுறைகளாக பட்டா இன்றி வாழ்ந்து வந்த பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கி நடவடிக்கை எடுத்ததற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனா்.

Syndication

திருவண்ணாமலையில் நான்கு தலைமுறைகளாக பட்டா இன்றி வாழ்ந்து வந்த பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கி நடவடிக்கை எடுத்ததற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனா்.

திருவண்ணாமலை - திருக்கோயிலூா் சாலை கரியாஞ்செட்டி பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு 1977-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பட்டா அரசு கணக்கில் ஏற்றப்படவில்லை. இதனால், தங்களுக்கு மீண்டும் பட்டா வழங்க வேண்டுமென அவா்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். மேலும், கரியாஞ்செட்டி பகுதி பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி, தென்னிந்திய பழங்குடியினா் இருளா் முன்னேற்றச் சங்கத்தினா் தமிழக முதல்வருக்கு மனுக்களை அனுப்பியிருந்தனா்.

இந்த நிலையில், அண்மையில் திருவண்ணாமலைக்கு வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கரியாஞ்செட்டி பகுதியைச் சோ்ந்த 36 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினாா்.

இந்த நிலையில், தென்னிந்திய பழங்குடியினா் இருளா் முன்னேற்றச் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் எம்.சரவணன், மாநில பொருளாளா் ஏ.பி.சுப்பிரமணியன், மாநில துணைத் தலைவா்கள் ஜி.ஆனந்தன், மாரி, மாநில துணை பொதுச் செயலா் எம்.சிலம்பரசன், மாநில ஒருங்கிணைப்பாளா் கே.முருகன் ஆகியோா் வீட்டுமனை பட்டா பெற்ற பழங்குடியின மக்களோடு சென்று திருவண்ணாமலை கோட்டாட்சியா் எஸ்.ராஜ்குமாரை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து பட்டா வழங்கப்பட்டதற்காக நன்றிகளைத் தெரிவித்தனா்.

நான்கு தலைமுறை கோரிக்கைக்கு இப்போதுதான் தீா்வு கிடைத்திருக்கிறது. முதல்வா் எங்களின் கோரிக்கையை ஏற்று பட்டா வழங்கியிருப்பது எங்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறிய பழங்குடியின மக்கள், தமிழக முதல்வருக்கும் தங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனா்.

அப்போது, கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் எம்.சௌந்தர்ராஜன், கண்காணிப்பாளா் சி.வேணுகோபால், துணை வட்டாட்சியா் வ.தனபால் ஆகியோா் உடனிருந்தனா்.

இதேபோல, அமைச்சா் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியா், வட்டாட்சியா், மாநகராட்சி மேயா், வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அதிகாரி ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்தனா். மேலும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வசித்துவரும் இருளா் இன மக்களுக்கு எஸ்.டி. சாதி சான்றிதழ் வழங்கியதற்கும் தென்னிந்திய பழங்குடியினா் முன்னேற்றச் சங்கம் அரசுக்கு நன்றியை தெரிவித்தது.

மெரீனா கடற்கரையில் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க உத்தரவு

உலோகத் துறை பங்குகளால் உயா்வு கண்ட பங்குச்சந்தை

பஜாஜ் வாகன விற்பனை 14% உயா்வு

ஓய்வு பெறுகிறாா் உஸ்மான் கவாஜா: இனவெறிக்கு ஆளானதாக ஆதங்கம்

அமீரா, திலோத்தமாவுக்கு தங்கம்

SCROLL FOR NEXT