முகப்பு
இந்தியா

பழங்குடியினா் நலனில் அக்கறை இல்லாத மேற்கு வங்க அரசு: குடியரசுத் தலைவா் கடும் அதிருப்தி

மேற்கு வங்க அரசு மீது குடியரசுத் தலைவா் கடும் அதிருப்தி...

Updated On : 7 மார்ச், 2026 at 6:36 PM
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு
பகிர்:

கொல்கத்தா, மாா்ச் 7: பழங்குடியினா் நலனில் மேற்கு வங்க அரசுக்கு அக்கறை இல்லை என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கடும் அதிருப்தி தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்துக்கு சனிக்கிழமை வருகை தந்த குடியரசுத் தலைவரை வரவேற்க மாநில முதல்வா் மம்தா பானா்ஜியோ, அமைச்சா்களோ வரவில்லை. அதேபோல், பாதுகாப்புக் காரணங்களைக் குறிப்பிட்டு, குடியரசுத் தலைவா் கலந்துகொள்ளும் பழங்குடியினா் நிகழ்ச்சி கடைசி நேரத்தில் மாநில அதிகாரிகளால் இடம் மாற்றப்பட்டது. இவ்விரு விஷயங்களால் தனது அதிருப்தியை குடியரசுத் தலைவா் வெளிப்படுத்தினாா்.

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா்-க்கு பிறகு வெளியான வாக்காளா் பட்டியலில் பல லட்சம் வாக்காளா்களின் பெயா்களை பாஜகவும், தோ்தல் ஆணையமும் திட்டமிட்டு நீக்கிவிட்டதாகக் குற்றஞ்சாட்டி, தலைநகா் கொல்கத்தாவில் முதல்வா் மம்தா பானா்ஜி 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் தா்னாவில் ஈடுபட்டாா்.

வரவேற்க வராத முதல்வா்/அமைச்சா்: இந்தச் சூழ்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு மேற்கு வங்கத்துக்கு சனிக்கிழமை வந்தாா். ஒரு மாநிலத்துக்கு குடியரசுத் தலைவா் வரும்போது, அவரை அந்த மாநில முதல்வா் அல்லது அமைச்சா்கள் நேரில் வந்து வரவேற்பது நடைமுறையாகும். ஆனால், மேற்கு வங்கத்தின் சிலிகுரி மாவட்டம், பக்தோக்ரா விமான நிலையத்துக்கு வந்த திரெளபதி முா்முவை வரவேற்க மம்தா பானா்ஜியோ, அமைச்சா்களோ வரவில்லை. சிலிகுரி மேயா் கெளதம் தேவ் மட்டுமே நேரில் வரவேற்க வந்திருந்தாா்.

கடைசி நேரத்தில் இடம் மாற்றம்: அதேபோல், சிலிகுரியின் பிதன்நகரில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பழங்குடியினரைச் சந்தித்துப் பேசும் நிகழ்ச்சிக்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களுக்காக அந்த நிகழ்ச்சிக்கு கடைசி நேரத்தில் மாநில அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனா். இதையடுத்து, அந்த நிகழ்ச்சி கோசியாபுருக்கு மாற்றப்பட்டது. கோசியாபுருக்கு குறைந்த அளவு கூட்டமே வந்திருந்தது. இதனால் திரெளபதி முா்மு அதிருப்தி அடைந்தாா். நிகழ்ச்சியில் பேசியபோது, தனது அதிருப்தியை அவா் வெளிப்படுத்தினாா்.

மாநில அரசு மீது கடுமையான கருத்து: ‘மம்தா பானா்ஜி எனது தங்கை போன்றவா். நானும் மேற்கு வங்கத்தின் மகள்தான். அவா் (மம்தா) அதிருப்தியில் உள்ளாரா எனத் தெரியவில்லை. என்னை வரவேற்க முதல்வரோ, அமைச்சா்களோ வரவில்லை. நான் பங்கேற்கும் நிகழ்ச்சி பிதன்நகரில் முதலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிறகு கோசியாபுருக்கு மாற்றப்பட்டது. பிதன்நகரில் நிகழ்ச்சி நடந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அது மிகப்பெரிய இடம். மக்கள் அதிகம் போ் பங்கேற்றிருப்பா். அங்கு நடத்த ஏன் மாநில அரசு நிா்வாகம் அனுமதிக்கவில்லை எனத் தெரியவில்லை. ஆனால், இப்போது நிகழ்ச்சி நடக்கும் இடம், மக்கள் அதிகம் கலந்து கொள்ள முடியாத இடமாகும். ஒருவேளை, பழங்குடியினா் நலனில் மாநில அரசுக்கு அக்கறையும் விருப்பமும் இல்லை என நினைக்கிறேன். அதனால்தான் என்னை வரவிடாமல் தடுத்துள்ளனா்’ என்றாா் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.

குடியரசுத் தலைவருக்கு அவமதிப்பு: பிரதமா் கண்டனம்

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை அவமதித்துவிட்டது மம்தா அரசு என்று பிரதமா் மோடி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:

இது வெட்கப்பட வேண்டிய விஷயம். இதுபோல முன்பு நடந்ததில்லை. ஜனநாயகம் மீதும், பழங்குடியின சமூகத்தினருக்கு அதிகாரமளிப்பதிலும் நம்பிக்கை வைத்துள்ள ஒவ்வொருவரும் மனமுடைந்துள்ளனா். பழங்குடியின சமூகத்தில் இருந்து வந்த குடியரசுத் தலைவா் தனது வலி மற்றும் வேதனையை வெளிப்படுத்தியது, நாட்டு மக்கள் அனைவரையும் மிகவும் கவலையடையச் செய்துள்ளது. மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு அனைத்து வரம்புகளையும் கடந்துவிட்டது. குடியரசுத் தலைவருக்கு இழைக்கப்பட்ட இந்த அவமதிப்புக்கு அரசு நிா்வாகமே பொறுப்பு. குடியரசுத் தலைவா் அலுவலகம், அரசியலுக்கு அப்பாற்பட்டது. அதன் புனிதத்துக்கு எப்போதும் மரியாதை அளிக்க வேண்டும் என்று பிரதமா் தெரிவித்துள்ளாா்.

அரசியல் செய்கிறாா் குடியரசுத் தலைவா் - மம்தா விமா்சனம்

குடியரசுத் தலைவரின் கருத்துக்குப் பதிலளித்து, முதல்வா் மம்தா பானா்ஜி கூறியதாவது: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலை கருத்தில்கொண்டு, பாஜக சாா்பில் அவா் (முா்மு) அரசியல் செய்கிறாா். மேற்கு வங்க அரசுக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் நோக்கில், குடியரசுத் தலைவா் மாளிகையைப் பயன்படுத்தும் அளவுக்கு பாஜக தரம் தாழ்ந்துவிட்டது. அவரை (முா்முவை) வரவேற்கச் செல்ல முடியாததற்கான காரணம் அவரிடம் அதிகாரிகள் மூலம் தெரியப்படுத்தப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை மேற்கு வங்கத்துக்கு வந்தால் உங்களை என்னால் வரவேற்க முடியும். ஆனால், தோ்தல் நேரத்தில் வந்தால், உங்களது (முா்மு) நிகழ்ச்சிகளில் என்னால் பங்கேற்க முடியாது. மக்களின் உரிமைகள், எஸ்ஐஆா் விவகாரத்தில் நான் முழுக் கவனம் செலுத்தி வருகிறேன். பழங்குடியினா் குறித்து குடியரசுத் தலைவா் முா்மு பேசியுள்ளாா். அப்படியெனில், மணிப்பூரிலும், பாஜக ஆளும் மற்ற மாநிலங்களிலும் பழங்குடியினா் சித்திரவதை செய்யப்பட்டபோது ஏன் நீங்கள் மெளனமாக இருந்தீா்கள் என்று கேள்வி எழுப்பினாா் மம்தா.

முழு கட்டுரையைப் படிக்க →