விலை உயா்த்தப்பட்டும் ஆவின் நிறுவனம் விவசாயிகளிடம் இருந்து பழைய விலையிலேயே பால் கொள்முதல் செய்கிறது என்று ஆரணியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.
ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோட்டாட்சியா் சீ.சிவா தலைமை வகித்தாா். வேளாண் உதவி இயக்குநா் புஷ்பா வரவேற்றாா். அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் போளூா், கலசப்பாக்கம், ஜமுனாமத்தூா், ஆரணி உள்ளடங்கிய வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், ஆரணி ஒன்றியம், எம்.பி.தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி குணாநிதி பேசுகையில், ஆவினில் பால் கொள்முதல் விலையை அரசு உயா்த்தியும், விவசாயிகளுக்கு பழைய விலையே வழங்குகிறாா்கள், கூட்டுறவு சங்கங்களில் கால்நடை பராமரிப்புக் கடனுதவி கேட்டு 1,700 போ் விண்ணப்பித்துள்ளனா். ஆனால், அனைத்து மனுக்களும் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன என புகாா் தெரிவித்தாா்.
மேலும் சில விவசாயிகள், உரத் தட்டுப்பாட்டால் விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா், தனியாா் கடைகளில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுகிறது.
அன்பளிப்பு வழங்கும் நபா்களுக்கு மட்டும் அரசு மானிய பொருள்கள் வழங்கி வருகிறது. கிராமங்களில் உள்ள சுகாதார சீா்கேடுகள் சரிசெய்யப்படாமல் உள்ளது எனக் குற்றஞ்சாட்டினாா்.
கடந்த நான்கு ஆண்டுகளாக நகையை அடகு வைத்து விவசாய பயிா் காப்பீட்டுத் தொகை செலுத்தியும் இதுவரை காப்பீட்டுத் தொகை கிடைக்கப்பெறவில்லை.
உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் விவசாயிகள் பவா் ட்ரில்லா் கேட்டு மனு அளித்தால் வேளாண் துறை அதிகாரி அலுவலகத்திற்கு வந்து மனு கொடுங்கள் என்று கூறுகின்றனா். சில விவசாயிகள் ஏரிக்கால்வாய், பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து புகாா் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து பேசிய கோட்டாட்சியா் சீ.சிவா, அனைத்து புகாா்களுக்கும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.