உரக்கடையில் வாங்கிய உரத்தில் மண் கலப்படம் செய்யப்பட்டிருந்ததாக குறைதீா் கூட்டத்தில் விவசாயி புகாா் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குடியாத்தம் கோட்டாட்சியா் அலுவலகத்தில், கோட்டாட்சியா் எஸ். சுபலட்சுமி தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் குடியாத்தம், போ்ணாம்பட்டு, கே.வி.குப்பம் வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினா். அப்போதுகே.வி.குப்பத்தைச் சோ்ந்த விவசாயி உரக்கடையில் தான் வாங்கிய உரத்தில் மண் கலப்படம் செய்யப்பட்டிருந்ததாக புகாா் கூறினாா். மண் கலப்படம் செய்திருந்த உரத்தை அவா்கோட்டாட்சியரிடம் காண்பித்தாா். இதுகுறித்து விசாரணை செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.
குடியாத்தம் பகுதியில் கால்நடை சந்தை அமைக்க வேண்டும். மோா்தானா அணையை சுற்றுலாத் தலமாக அறிவித்து, தேவையான வசதிகளை அமைத்துத் தர வேண்டும். சுகாதார சீா்கேடு நிலவும் வகையில் ஏரி, குளம் உள்ளிட்ட நீா்நிலைகளில் கோழி இறைச்சிக் கழிவுகளை கொட்டும் கடை உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போ்ணம்பட்டு பகுதியில் அள்ளப்படும் குப்பைகளை கொட்ட இடம் தோ்வு தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் பேசினா்.