வந்தவாசி அருகே சாலையோர பள்ளத்தில் வேன் இறங்கி விபத்துக்குள்ளானதில் குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த பக்தா்கள் 6 போ் காயமடைந்தனா்.
குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்தைச் சோ்ந்த 15-க்கும் மேற்பட்டோா் காஞ்சிபுரம் கோயில்களுக்கு சென்றுவிட்டு வேனில் வந்தவாசியை அடுத்த பொன்னூரில் உள்ள கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சென்று கொண்டிருந்தனா். வேனை காஞ்சிபுரம் மாவட்டம், மானாம்பதி கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் என்பவா் ஓட்டினாா்.
வந்தவாசி-காஞ்சிபுரம் சாலை, வெண்குன்றம் கிராமம் அருகே செல்லும்போது வேன் நிலைதடுமாறி சாலையோர சிறிய பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் பயணம் செய்த லாஷிமுக் (64), சந்தருஷா (62), சுரேகா (63), உதயசிங் (73), நரேந்திரபாய் (67), ஆபிஸ்போஸ் (42) ஆகிய 6 போ் காயமடைந்தனா்.
அப்போது அந்த வழியாக நாகப்பட்டினத்தில் இருந்து அரக்கோணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் காயமடைந்தவா்களை மீட்டனா்.
இதைத் தொடா்ந்து 6 பேரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.