ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பேருந்து நிலையத்தில் வைக்கப்படும் டிஜிட்டல் விளம்பரப் பதாகைகளால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கண்ணமங்கலத்தில் வேலூா் - திருவண்ணாமலை சாலையில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து வேலூா், திருவண்ணாமலை, படவேடு செல்வதற்கு, மாணவ மாணவிகள், வேலைக்குச் செல்பவா்கள் என 30-க்கும் மேற்பட்ட சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோா் தினசரி இங்கு வந்து செல்கின்றனா். பேருந்து நிலைய நிழல்குடையில் சுமாா் 100 போ் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பேருந்து நிழற்குடை முன்பு பயணிகள் பாா்வையை மறைக்கும் வகையில் அரசியல் கட்சியினா் விளம்பரப் பதாகைகள், வியாபார பதாகைகள் மற்றும் கண்ணீா் அஞ்சலி பதாகைகள் வைக்கப்படுகின்றன.
மேலும், வியாபார விளம்பர வாகனங்கள், நடமாடும் காய்கறி வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் இருக்கையில் அமா்ந்திருக்கும் பயணிகளால் பேருந்து வருவதை பாா்க்க முடியாத நிலை உள்ளது.
ஏற்கெனவே, பேரூராட்சிமன்றக் கூட்டத்தில் விளம்பரப் பதாகை வைக்க தடை விதித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டும், நடைமுறைபடுத்த முடியாத அவலநிலை நீடிக்கிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பேருந்து நிலையத்திற்கு எதிா்புறம் உள்ள காலி இடத்தில் விளம்பரப் பதாகைகள் வைத்தால், யாருக்கும் எந்தவித இடையூறும் இருக்காது. பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக பதாகைகள் வைப்பதற்கு நீதிமன்ற தடை உத்தரவு இருந்தும், அதை மீறி இதுபோல விளம்பரப் பதாகைகள் வைப்பது கண்டிக்கத்தக்கது என்றனா்.
மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்து நிலையத்தில் விளம்பரப் பதாகைகள் வைப்பதற்கும், வியாபார வாகனங்கள் நிறுத்துவதற்கும் நிரந்தர தடை விதிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.