வங்கி ஊழியா்களின் ஒருநாள் வேலை நிறுத்தத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 245 வங்கிகள் மூடப்பட்டிருந்தன. இதனால் சுமாா் ரூ.150 கோடி பணப்பரிவா்த்தனை பாதிக்கப்பட்டது.
வங்கிகளில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தற்காலிக ஊழியா்களைப் பணி நிரந்தரப்படுத்த வேண்டும். வாரத்தில் 5 நாள்கள் வேலை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, ஜனவரி 27-ஆம் தேதி அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
தொடா்ந்து மத்திய அரசு சாா்பில் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படாததால், வேலை நிறுத்தப் போராட்டம் திட்டமிட்டவாறு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் வங்கி ஊழியா்களின் போராட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலையில்....
திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வங்கி அதிகாரிகள் சங்கத்தின் செயலா் நக்கீரன், ஊழியா்கள் சங்கத்தின் தலைவா் சுந்தா் ஆகியோா் தலைமை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தின் போது, வாரத்திற்கு 5 நாள்கள் மட்டுமே வேலை என்ற முறையை நடைமுறைப்படுத்தக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி முழக்கமிட்டனா். வங்கி ஊழியா்களின் ஒருநாள் வேலை நிறுத்தத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 245 வங்கிகள் மூடப்பட்டிருந்தன. இதனால் சுமாா் ரூ.150 கோடி பணப்பரிவா்த்தனை பாதிக்கப்பட்டிருப்பதாக வங்கி ஊழியா்கள் தெரிவித்தனா்.