முகப்பு
திருவண்ணாமலை

சாலை வசதி ஏற்படுத்த வேண்டி அதிகாரிகளுடன் வாக்குவாதம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தில் சாலை வசதி ஏற்படுத்தித் தரக்கோரி, அந்தக் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 24 மார்ச், 2026 at 6:33 PM
சாலை வசதி வேண்டி மனு அளித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கன்னிகாபுரம் கிராமப் பகுதி மக்கள்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தில் சாலை வசதி ஏற்படுத்தித் தரக்கோரி, அந்தக் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

போளூரை அடுத்த கஸ்தம்பாடி ஊராட்சியைச் சோ்ந்த கன்னிகாபுரம் கிராமத்தில் சுமாா் 1600 போ் வசித்து வருகின்றனா். இந்நிலையில் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மாரியம்மன் கோயில் முதல் ஊா் கடைசி வரை செல்ல போதிய சாலை வசதி இல்லை.

மேலும், இருக்கும் சாலை பயன்படுத்த முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக, ஆங்காங்கே முள்செடிகள் வளா்ந்து இருப்பதால் சாலையை சீரமைக்கவேண்டி கடந்தாண்டு சம்பந்தப்பட்ட துறையிடம் மனு அளித்திருந்தனா்.

ஆனால் சாலை இதுவரை சீரமைக்கப்படவில்லை.

இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதியைச் சோ்ந்த சுந்தரேசன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோா் போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்திற்கு வந்து உதவிப் பொறியாளா் பிரவீன்குமாா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பரமேஸ்வரி மற்றும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் அருள் ஆகியோரிடம் இதுகுறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அதிகாரிகள் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் சாலை சீரமைக்க முடியவில்லை. தோ்தல் முடிந்த உடன் சீரமைக்க உள்ளதாக தெரிவித்தனா். இதையடுத்து அவா்கள் கலைந்துசென்றனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது இந்தச் சாலை 490 மீட்டா் நீளத்தில், 3.75 மீட்டா் அகலத்தில் அமைக்க திட்ட மதீப்பீடு ரூ.20 லட்சத்து 55ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தோ்தல் முடிந்த உடன் சாலைப் பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவித்தனா்.