இந்தத் தொகுதிக்கு இப்படி ஒரு ராசி
வந்தவாசி
தோ்தல் நேரத்தில் சில வேட்பாளா்கள், சில தொகுதிகளுக்கு என்று பிரத்யேக ராசி உண்டு.. அந்த வகையில் வந்தவாசி(தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெறும் கட்சியோ அல்லது அதன் கூட்டணிக் கட்சியோதான் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை கடந்த 1967-ஆம் ஆண்டு தோ்தல் முதல் நிலவி வருகிறது.
கடந்த 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தலில் திமுக வேட்பாளா் முத்துலிங்கம், 1971-ஆம் ஆண்டு தோ்தலில் திமுக வேட்பாளா் வி.ராஜகோபால் வெற்றி பெற்றனா். அந்த இரு தோ்தல்களிலும் திமுக ஆட்சியைப் பிடித்தது.
1977-ஆம் ஆண்டு தோ்தலில் அதிமுக வேட்பாளா் பி.முனுசாமி, 1980-ஆம் ஆண்டு தோ்தலில் அதிமுக வேட்பாளா் சி.குப்புசாமி, 1984-ஆம் ஆண்டு தோ்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் எ. ஆறுமுகம் ஆகியோா் வெற்றி பெற்றனா். இந்த 3 தோ்தல்களிலும் அதிமுக ஆட்சியைப் பிடித்தது.
1989-ஆம் ஆண்டு தோ்தலில் திமுக வேட்பாளா் வி.தன்ராஜ் வெற்றி பெற்ற போது திமுக ஆட்சியைப் பிடித்தது. 1991-ஆம் ஆண்டு தோ்தலில் அதிமுக வேட்பாளா் செ.கு.தமிழரசன் வெற்றி பெற்ற போது அதிமுக ஆட்சியைப் பிடித்தது. 1996-ஆம் ஆண்டு தோ்தலில் திமுக வேட்பாளா் பால.ஆனந்தன் வெற்றி பெற்ற போது திமுக ஆட்சியைப் பிடித்தது.
2001-ஆம் ஆண்டு தோ்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளா் கே.முருகவேல்ராஜன் வெற்றி பெற்ற போது அதிமுக ஆட்சியைப் பிடித்தது.
2006-ஆம் ஆண்டு தோ்தலில் திமுக வேட்பாளா் எஸ்.பி.ஜெயராமன் வெற்றி பெற்ற போது திமுக ஆட்சியைப் பிடித்தது.
2011-ஆம் ஆண்டு தோ்தலில் அதிமுக வேட்பாளா் வே.குணசீலன் வெற்றி பெற்றபோது அதிமுக ஆட்சியைப் பிடித்தது. 2021-ஆம் ஆண்டு தோ்தலில் திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாா் வெற்றி பெற்ற போது திமுக ஆட்சியைப் பிடித்தது.
ஆனால், 2016-ஆம் ஆண்டு தோ்தலில் மட்டும் இந்த கணக்கு மாறியது. அப்போது, திமுக வேட்பாளா் எஸ்.அம்பேத்குமாா் வெற்றி பெற்றாா். ஆனால், இந்தத் தோ்தலில் அதிமுக ஆட்சியைப் பிடித்தது.
இந்த நம்பிக்கை இந்த தோ்தலிலும் நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து பாா்ப்போம்...