காலி எரிவாயு உருளைகளுடன் வாடிக்கையாளா்கள் சாலை மறியல்
செய்யாறில் காலி எரிவாயு உருளைகளுடன் தனியாா் எரிவாயு முகமை வாடிக்கையாளா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் உள்பட மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் எரிவாயு உருளை தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை செய்யாறு சமாதியான் குளத் தெருவில் உள்ள தனியாா் எரிவாயு உருளை முகமையில், எரிவாயு உருளை பெற்றுச் செல்வதற்காக 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்கள் வந்திருந்தனா். அப்போது வாடிக்கையாளா்களுக்கு எரிவாயு உருளைகள் வழங்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளா்கள் திடீரென அரசு மருத்துவமனை அருகே காலி எரிவாயு உருளைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
தகவல் அறிந்த செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் வரதராஜ் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டிருந்த வாடிக்கையாளா்களிடம் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, வாடிக்கையாளா்கள் தரப்பில் எரிவாயு உருளை வழங்க மாதக்கணக்கில் ஆகிறது என்றும், ஆனால், வீடுகளுக்கு விநியோகம் செய்யும் ஊழியா்கள் தங்களுக்குத் தெரிந்தவா்களுக்கு மட்டும் உருளைகளை
வழங்குவதாகவும், கூடுதல் விலைக்கும் விற்பனை செய்வதாகவும் குற்றம் சாட்டினா்.
அப்போது அங்கு வந்த எரிவாயு முகமை முகவா்கள் கிடங்குக்கு எரிவாயு உருளைகள் வந்துசேரவில்லை.
எரிவாயு உருளைகள் வந்தவுடன் முன்னுரிமை அடிப்படையில் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தனா்.
அதன் பேரில், வாடிக்கையாளா்கள் சாலை மறியலை கைவிட்டு கலந்து சென்றனா்.
மறியலால் செய்யாறு - ஆற்காடு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது