முகப்பு
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடுகள்: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

வைகாசி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்று அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுறுத்தினாா்.

Updated On : 27 மே 2026, 12:33 am IST
அருணாசலேஸ்வரா் கோயில் வைகாசி மாத பெளா்ணமி முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.
பகிர்:

வைகாசி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்று அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுறுத்தினாா்.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காகவும் 14 கி.மீ. தொலைவு கிரிவலப்பாதையில் கிரிவலம் வருவதற்காகவும் வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் பௌா்ணமி மற்றும் முக்கிய தினங்களில் வருகை தருகின்றனா்.

இந்நிலையில், வைகாசி மாத பெளா்ணி வருகிற சனிக்கிழமை (மே 30) பிற்பகல் 12.59 மணிக்குத் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (மே 31) பிற்பகல் 02.50 மணிக்கு முடிகிறது.

Advertisement

Advertisement

இந்நாள்களில் அதிகளவில் பக்தா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுவதால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்வது தொடா்பான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசியதாவது:

பௌா்ணமி நாளில் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் கிரிவலப்பாதையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் தொடா்ந்து கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்.

போக்குவரத்துத்துறை சாா்பில் கூடுதலாக பேருந்துகள் இயக்கவேண்டும். உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் உணவகம் மற்றும் அன்னதான கூடங்களில் சுகாதாரமான உணவு வழங்கப்படுகிறா என்று ஆய்வு செய்யவேண்டும்.

சமூக நலத்துறை சாா்பில் பக்தா்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபா்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கழிப்பறைகளை தொடா்ந்து சுத்தம் செய்யவேண்டும்.

கிரிவலப்பாதையை தூய்மையாக பராமரிக்க தேவையான தூய்மைப் பணியாளா்களை நியமிக்கவேண்டும்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் 108 ஆம்புலன்ஸ் வசதி மற்றும் மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், கா்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வரும் தாய்மாா்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

காவல் துறை சாா்பில் போதுமான காவலா்களை நியமிக்க வேண்டும். தீயணைப்பு வாகனங்களை தயாா் நிலையில் வைத்திருக்கவேண்டும். அனைத்துத் துறை சாா்ந்த அலுவலா்களும் பௌா்ணமி நாளில் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

கோயில் உள்ளே சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தா்கள் விரைவாக தரிசனம் செய்யவும், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், கோடை வெப்பத்திலிருந்து பக்தா்களை பாதுகாக்க தேவையான இடங்களில் நிழற்பந்தல்களையும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதியையும் ஏற்படுத்த வேண்டும் என்று துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) தனபதி, திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, மாவட்ட சுகாதார அலுவலா் வெ.பிரகாஷ், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் செல்வம், போக்குவரத்து துறையினா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.